தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் மார்ச் 12 முதல் மார்ச் 19ஆம் தேதி வரை வேட்புமனுவை தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள், அவர்களோடு சேர்ந்து இரண்டு பேருக்கு மட்டுமே அனுமதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (15.03.2021) தமிழகம் முழுவதும் முக்கிய தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமான வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதேபோல் நேற்று ஸ்ரீரங்கம் தொகுதியின் அதிமுக வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கு.ப.கிருஷ்ணன், ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது 20க்கும் மேற்பட்ட அவருடைய ஆதரவாளர்கள் கு.ப.கிருஷ்ணனுடன் உள்ளே செல்ல முற்பட்டுள்ளனர். கு.ப. கிருஷ்ணனும் இதுதொடர்பாக தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். எனவே அவர் மீது வழக்கு பதியலாம் எனவும் பேசப்பட்டுவருகிறது.