புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள பாலகிருஷ்ணபுரம் – மாத்தூர் ராமசாமிபுரம், தஞ்சை மாவட்டம் மணக்காடு ஆகிய கிராமங்களுக்கு மத்தியில் ஓடும் வில்லுனி ஆற்றங்கரையில் சுமார் 173 ஏக்கர் பரப்பளவில் உள்ள இடம் அம்பலத்திடல்.
அந்த திடலில் வன்னி மரங்கள் அடர்ந்து காணப்படுவதுடன் முதுமக்கள் தாழிகள் புதைக்கப்பட்ட புதைவிடங்கள் உள்ளது. முதுமக்கள் தாழிகள் சுண்ணாம்பு கட்டுமானத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் சுடுசெங்கல் கட்டுமானங்களும் காணப்படுகிறது.
இந்த இடங்கள் பற்றி கடந்த 2014 ம் ஆண்டும், 2016 ம் ஆண்டும் நக்கீரன் தொடர்ந்து செய்திகள் வெளியிட்டிருந்தோம். முதுமக்கள் தாழிகளில் உள்ள கருப்பு சிவப்பு பானை ஓடுகளில் தழைகீழ் ஏணி போன்ற குறியீடுகள் உள்ளது. அதனால் இது எழுத்து காலத்திற்கு முந்தைய குறியீடு காலம் என்று புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகம் ஆய்வுக்கு பிறகு கூறினார்கள். இன்று அதே நிறுவனம் நடத்திய ஆய்வில் பழங்கற்கால கற்கோடாரி கண்டெடுக்கப்பட்டது.
கண்டெடுக்கப்பட்ட கற்கோடாரியை அறந்தாங்கி வட்டாட்சியர் சூரியபிரபுவிடம் ஒப்படைத்தனர். மேலும் இந்த கற்கோடாரி இரும்பு காலத்திற்கு முன்பு, அதாவது சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நாகரீக சமூகம் பயன்படுத்தியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அரசு அகழாய்வு செய்தால் இன்னும் பல வரலாற்று சான்றுகளை காணலாம் என்றும் கூறினார்கள்.
இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி அனுமதியுடன் அம்பத்திடலுக்கு வந்த அறந்தாங்கி வட்டாட்சியர் சூரியபிரபு முழு திடலையும் சுற்றிப் பார்த்த பிறகு.. செய்தியாளர்களிடம் பேசும் போது, "முதுமக்கள் தாழிகள், மனிதர்கள் வாழ்விடங்களாக கட்டுமானப் பகுதிகள் இருக்கிறது. இவற்றை ஆய்வு செய்தால் இன்னும் பல வரலாற்று சான்றுகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. அதனால் தொல்லியல் துறை அனுமதியுடன் ஒரு வாரத்தில் அகழாய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
சுமார் 15 வருடங்களாக இந்த இடத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் இன்ற பழங்கற்கால கற்கோடாரி கண்டெடுக்கப்பட்ட தகவல் அறிந்து ஆய்வுக்கு வந்துள்ளனர். அதிகாரிகள் தாமதம் செய்த காலங்களில் ஆக்கிரமிப்புகள் தான் அதிகமாகி உள்ளது. அதனால் உடனடியாக ஆய்வுகள் செய்ய முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என்றார்கள் கிராம மக்கள் . மேலும் இதே வில்லுனி ஆற்றங்கரையில் திருநாளூர் கிராமத்திலும்
இதே போன்ற முதுமக்கள் தாழிகள் புதைக்கப்பட்டு தற்போது சிதைக்கப்பட்டுள்ளதால் அந்தப் பகுதியிலும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.