அதிமுக கட்சி மற்றும் ஆட்சியை வழி நடத்த ஒற்றை தலைமை தான் சிறந்தது என்று எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறியதைத் தொடர்ந்து அதிமுகவில் ஏற்பட்ட சலசலப்பு அதன் தொடர்ச்சியாக எழுந்த விவாதங்கள், என அக்கட்சிக்குள் கலவர குரல் மேலோங்க இதை தடுக்கும் விதமாக மா.செ.க்கள், எம்.எல்.ஏ., எம்.பி.க்கள், கூட்டம் இன்று காலை 10.30 க்கு அக்கட்சியின் அலுவலகமான சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது.
முதலில் பத்திரிகை மற்றும் தொலைகாட்சி கேமராமேன்கள் புகைப்படங்கள் எடுத்ததும் அடுத்து கூட்டத்தில் கலந்துகொண்டவர்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. இதற்கே அரை மணி நேரம் கழிந்தது. அதன் பிறகு 11 மணிக்கு தொடங்கிய கூட்டம் 12 மணிக்கு நிறைவு பெற்றது இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளரான துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளரான முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அவைத்தலைவர் மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர்களான வைத்தியலிங்கம் மற்றும் கே .பி. முனுசாமி ஆகிய ஐந்து பேர்தான் கூட்டத்தில் பேசி உள்ளனர்.
தொடக்கத்தில் பேசிய அவைத்தலைவர் மதுசூதனன் இந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் 22 சட்டமன்றத் தேர்தலிலும் நாம் எப்படி எல்லாம் தோல்வியை சந்தித்தோம் என்று அமைச்சர்களை மட்டும் வைத்து பேசிப் பிரயோசனமில்லை. எப்படி எம்ஜிஆர் இந்த கட்சிக்கு நாடி நரம்பு என்றால் அது தொண்டர்கள்தான் எனக் கூறியிருக்கிறாரோ அதுபோல் தொண்டர்களிடம் கருத்து கேட்க வேண்டும். என்று தனது பேச்சில் கூறியிருக்கிறார்.
அதன் பிறகு பேச வந்த முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் இக்கூட்டத்தில் நாம் ஐந்து தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளோம். இந்த கூட்டம் நமது ஒற்றுமையை காட்டுவதற்காகத்தான் ஆகவே யாரும் தனித்தனியாக கருத்துக்களை பேச வேண்டாம். முதல்வரும், துணை முதல்வரும் பேசுவார்கள் எனக் கூறினார். அடுத்துப் பேசிய கேபி முனுசாமியும் கட்சியின் ஒற்றுமை நமக்கு முக்கியம் அந்தநிலையிலிருந்து கட்சியை ஆட்சியை நாம் கொண்டு செல்ல வேண்டும் என்று மட்டும் பொத்தாம் பொதுவாக பேசியிருக்கிறார்.
இதில் கலந்து கொண்ட பல எம்எல்ஏக்கள் தங்களது பிரச்சனைகளை அல்லது தங்களது கருத்துக்களை வெளிப்படையாக பேசலாம் என இருந்துள்ளார்கள். இதைப்பற்றி இக்கூட்டத்தில் கலந்துகொண்ட மேற்கு மண்டல அதிமுக எம்எல்ஏ ஒருவரிடம் நாம் பேசினோம் அதற்கு அவர் "இந்த கூட்டம் என்ன நோக்கத்திற்காக போடப்பட்டது என்பது எங்களில் யாருக்கும் தெரியவில்லை. கூட்டம் தொடங்கியதும் தனித்தனியாக யாரும் கருத்துக்கள் பேசக்கூடாது என்று ஒட்டுமொத்தமாக எல்லோருக்கும் வாய்ப்பூட்டு போட்டு விட்டனர். பேசுவதற்காக எழுந்த ஒரு சிலரையும் உட்காருங்கள் என முதலமைச்சர் கூறிவிட்டார் வேறு என்ன செய்ய முடியும் ஒரு ஜனநாயக அமைப்பில் அதன் நிர்வாகிகள் கூட்டம் என்றால் விவாதம் நடத்தி கருத்துக்களை கேட்டு ஒரு முடிவு எடுப்பது தான் சரியான அரசியல் நிலைப்பாடாக இருக்கும் ஆனால் இங்கு ஒரு சர்வாதிகார முறையை நடத்துகிறார்கள்.
இப்போதைக்கு இந்த கூட்டத்தில் எந்த சலசலப்பும் இல்லை எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை என வெளியே காட்டிக் கொண்டாலும், இவர்கள் போட்ட வாய்ப்பூட்டினால் இதில் கலந்து கொண்ட எம்எல்ஏக்கள் பலருக்கும் கோபம் அதிகரித்துள்ளது. கூட்டத்தில் எந்த கருத்தையும் பேசவும் கூடாது மீடியாவில் எந்த பேட்டியும் கொடுக்கக்கூடாது. இறுதியாக எங்கள் பிரச்சனைகளை மனுவாக கூட கொடுக்க கொடுக்கக் கூடாது என்று முடிவு செய்துவிட்டார்கள். இதன் வெளிப்பாடு இனி போகப்போகத்தான் தெரியும் சார்"என்றார்.
கலவர மேகத்தை கட்டுப்படுத்த போடப்பட்ட கூட்டம் மென்மேலும் கொதிநிலையை ஏற்படுத்தியுள்ளது.