சிதம்பரம் நகரத்தில் உள்ள விளங்கியம்மன்கோயில் தெருவில் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர் மன்ற தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். இதில் தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து உறுதிமொழியை வாசித்துத் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கம் நிகழ்ச்சியைத் துவக்கிவைத்தார். பின்னர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண்களுக்கு அமைச்சர் மக்கும் குப்பை, மக்கா குப்பை குறித்தும் எடுத்துக் கூறி அதனைத் தனித்தனியாக வழங்க வேண்டும் எனக்கூறி இரு வண்ணங்களில் குப்பைகூடையை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து சிதம்பரம் உழவர் சந்தையில் ரூ. 5 கோடி மதிப்பில் நவீன காய்கறி மார்கெட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனைப் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளின் விபரங்களைக் கேட்டறிந்தார். இதனையெடுத்து அண்ணாகுளம் தூர்வாரி நடைபாதை அமைக்கும் பணிகள் ரூ. 139 லட்சத்தில் நடைபெற்று வருகிறது. இதனையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியன், கோட்டாட்சியர் ரவி, வட்டாட்சியர் ஹரிதாஸ், நகர்மன்ற துணைத்தலைவர் முத்துகுமரன், நகராட்சி ஆணையர் அஜிதாபர்வினா, பொறியாளர் மகாராஜன், சிபிஎம் நகர் மன்ற உறுப்பினர் தஸ்லிமா உள்ளிட்ட நகர் மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட நகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள், திமுக முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.