விவசாயம் சார்ந்த படிப்புகள் தொடங்க தமிழக அரசின் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டியது கட்டாயம் என, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், விவசாயப் படிப்புகள் துவங்க, தமிழக அரசின் தடையில்லா சான்று பெற வேண்டும் என கடந்த ஜூலை மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அரசின் தடையில்லா சான்று பெறாமல் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது எனவும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, காருண்யா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, எஸ்.ஆர்.எம். இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் & டெக்னாலஜி ஆகிய கல்வி நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
அதில், விவசாயப் படிப்புகள் துவங்க பல்கலைக்கழக மானியக் குழுவின் அனுமதியே போதும். தமிழக அரசினுடைய தடையில்லா சான்றிதழ் பெற வேண்டிய அவசியம் இல்லை என்பதால், தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுக்களில் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்குகள், தலைமை நீதிபதி சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பு நேற்று (06/10/2020) விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், விவசாயம் என்பது மாநிலப் பட்டியலுக்கு உட்பட்டதென்பதால், விவசாயம் சார்ந்த படிப்புகள் தொடங்க, கல்லூரிகளாக இருந்தாலும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக இருந்தாலும், 110 ஏக்கர் இடம் வைத்திருக்க வேண்டும். அரசின் விதிகளைப் பின்பற்றினால் தான் தடையில்லா சான்று வழங்க முடியும். எனினும், இதுவரை படித்து முடித்த மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாது. சம்மந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள், விவசாய படிப்புகளுக்கு இனி புதிதாக மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்க கூடாது என வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களைத் தொடர்ந்து, அனைத்து நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும், இந்தாண்டு வேளாண் படிப்புகளில் மேற்கொள்ளப்பட்ட மாணவர் சேர்க்கைகள், இந்த வழக்குகளின் இறுதி தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஆறு வாரங்களுக்குத் தள்ளி வைத்தனர்.