2022-2023ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்றது. தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
நேற்று பேரவை துவங்கி நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை வாசிக்க தொடங்கிய உடனே, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டது, எஸ்.பி வேலுமணி வீட்டில் ரெய்டு நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். கூச்சல் காரணமாக அமைதியாக இருக்கும்படி சபாநாயகர் அறிவுறுத்தியபோதிலும் அதிமுகவினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர். பட்ஜெட் உரைக்கு முன் பேச வாய்ப்பளிக்காததால் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் நடைபெறும் அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என சட்டப்பேரவை சபாநகர் அப்பாவு தெரிவித்திருந்தார். அதனடிப்படையில் நேற்று நடைபெற்ற அலுவல் ஆய்வுக்கூட்டத்திற்குப் பின் வரும் மார்ச் 24ஆம் தேதி வரை பேரவையை நடத்த முடிவு செய்யப்பட்டது. கடைசி நாளான 24ஆம் தேதி பட்ஜெட் மீதான விவாதத்திற்கு தமிழக முதல்வர் பதிலுரை ஆற்றுகிறார். 24ஆம் தேதி கேள்வி பதில் கிடையாது. மற்ற நாட்களில் கேள்வி பதில் இருக்கும் அவை நேரலையாக ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடப்பாண்டிற்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் காலை 10 மணிக்கு வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.