Skip to main content

உச்சநீதிமன்ற குட்டுக்கு பிறகாவது மைய அரசு திருந்த வேண்டும்! அன்புமணி

Published on 19/09/2017 | Edited on 19/09/2017
உச்சநீதிமன்ற குட்டுக்கு பிறகாவது மைய அரசு திருந்த வேண்டும்! அன்புமணி

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற குட்டுக்கு பிறகாவது மைய அரசு திருந்த வேண்டும் என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

காவிரி பிரச்சினை தொடர்பான வழக்கில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள நிலைப்பாட்டுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. காவிரி விவகாரத்தில் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டை மத்திய அரசு மேற்கொண்டிருப்பதை ஏற்க முடியாது; இது கண்டிக்கத்தக்கது.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து  உச்சநீதிமன்றத்தில் தமிழகம் தொடர்ந்த வழக்கின் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 26-ஆவது நாளாக இன்று நீடித்த  விசாரணையில் நேர்நின்ற மத்திய அரசின் வழக்கறிஞர்,‘‘காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு இறுதியானது அல்ல. அத்தீர்ப்பை மாற்றவோ, திருத்தவோ நாடாளுமன்றத்திற்கு முழுஅதிகாரம் உண்டு. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது பற்றி நாடாளுமன்றம் தான் முடிவெடுக்க முடியும். காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின் அடிப்படையில் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க முடியாது’’ என்று வாதிட்டார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதற்கு எதிராக கர்நாடகத் தரப்பு வழக்கறிஞர் எவ்வளவு கடுமையாக வாதிடுவாரோ, அதை விட பல மடங்கு கடுமையாக மத்திய அரசு வழக்கறிஞர் வாதிட்டார். முழுக்க முழுக்க தமிழக நலனுக்கு எதிராக மத்திய அரசு வழக்கறிஞர் வாதிட்டது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.

அதேநேரத்தில் மத்திய அரசின் வாதங்களை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டதுடன், காவிரி விவகாரத்தில் கடமையைச் செய்யத் தவறியதற்காக மத்திய அரசுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு கடந்த 2013&ஆம் ஆண்டு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்ட பிறகும், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காதது ஏன்? என்றும் உச்சநீதிமன்றம்  வினா எழுப்பியது. உச்சநீதிமன்றத்தின் கடுமையான கண்டனத்திற்கு பிறகு தான் காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதியளித்தது.

காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசு அளித்துள்ள வாக்குறுதியை நம்ப முடியாது. உச்சநீதிமன்றத்தின் கோபத்திலிருந்து தப்பிப்பதற்காகக் கூட அப்படி ஒரு வாக்குறுதியை அளித்திருக்கலாம். கடந்த ஆண்டு இதே செப்டம்பர் மாதத்தில், அடுத்த 4 நாட்களில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்ட போது, அதை நிறைவேற்றுவதாக உறுதியளித்த மத்திய அரசு , அடுத்த இரு நாட்களில் பல்டி அடித்து மேலாண்மை வாரியம் அமைக்கும்படி ஆணையிட உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று கூறியதை எளிதில் மறந்துவிட முடியாது.

காவிரி பிரச்சினையைப் பொறுத்தவரை மத்திய அரசு எப்போதுமே தமிழகத்திற்கு எதிராகத் தான் செயல்பட்டு வருகிறது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்தாலும், பாரதிய ஜனதா ஆட்சி செய்தாலும் காவிரிப் பிரச்சைனையைப் பொறுத்தவரை எந்த வித்தியாசமும் கிடையாது. மத்தியில் நரேந்திரமோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு பதவியேற்ற பிறகு காவிரி பிரச்சினையில் பல முறை அதன்  நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருக்கிறது. மத்திய அரசு பதவியேற்ற சில வாரங்களிலேயே எனது கோரிக்கையை ஏற்று மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த அப்போதைய நீர்வள அமைச்சர் உமாபாரதி, அடுத்த 24 மணி நேரத்தில் கர்நாடகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்களின் அழுத்தத்திற்கு பணிந்து நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது அனைவரும் அறிந்ததே.

கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்று விட வேண்டும் என பா.ஜ.க துடித்துக் கொண்டிருக்கிறது. அதேநேரத்தில் தமிழ்நாட்டில் அந்தக் கட்சி தலைகீழாக நின்றாலும் எதையும் சாதிக்க முடியாது. எனவே, தங்களுக்கு சாதகமான கர்நாடகத்துக்கு ஆதரவாக தமிழகத்திற்கு துரோகம் செய்ய மத்திய அரசு தயாராகி விட்டது. அதனால் தான் காவிரி பிரச்சினையில் நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த மறுத்தது.

காவிரி சிக்கலில் கடந்த காலங்களில் தமிழகத்திற்கு செய்த துரோகங்களுக்காக உச்சநீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளான மத்திய அரசு, இனியாவது அதன் பொறுப்பை உணர்ந்து அனைத்து மாநில மக்களுக்கும் நியாயமாக நடந்து கொள்வது தான் கடமை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்காக காத்திருக்காமல் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைத்து ஆணையிட வேண்டும். 

சார்ந்த செய்திகள்