திரைப்பட இசை வெளியீட்டு விழா ஒன்றில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், “தீரன், நேர்கொண்ட பார்வை போன்ற படங்களை இயக்கிய வினோத் திரைப்படங்களில் H.வினோத் எனத் தன் பெயரைப் போட்டார். டேய், அத தமிழ்ல மாத்துடா எனச் சொன்னேன். நம்ம அப்பா என்ன வெள்ளக்காரனா?... பெயரின் முதல் எழுத்தை தாய்மொழியில் போடவில்லை என்றால் எப்படி? தமிழில் போடு எனச் சொன்னேன். அதன் பிறகு ஹெச்.வினோத் என மாத்திட்டார்.
ஏதாவது பிரச்சனை ஆகிவிடுமோ எனக் கேட்டார். என்ன பிரச்சனை ஆனாலும் அது பெரிதல்ல, மாற்று என்றேன். அவரது திரைப்படங்களில் இப்போது அப்படித்தான் வருகிறது, பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன். ஒரு எழுத்தைக் கூட மாற்ற முடியாத தமிழன் எப்படி நாட்டை மாற்ற முடியும். நாக்கைத் திருத்த முடியாத நம்மால் நாட்டைத் திருத்த முடியும் என நினைக்கின்றீர்களா?
பேச முடியாத ஒன்றா தமிழ்? தமிழில் சொற்கள் இல்லையா? எம்மொழிகளின் துணையின்றியும் தனித்து இயங்கும் மொழி தமிழ் ஒன்றுதான். அதனால் தான் உயர்தனிச் செம்மொழி என்றார்கள்” எனப் பேசினார்.