கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் தாலுக்காவுக்கு உட்பட்டது கல்வராயன் மலை. இந்த மலையில் 15 ஊராட்சியில் 177 கிராமங்கள் உள்ளன. சுமார் 60 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்களின் 50 வருட கோரிக்கை நிறைவேறியுள்ள மகிழ்ச்சியில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.
சுதந்திரத்துக்குப் பின்பும் இந்த மலையை மூன்று ஜாகீர்தாரர்கள் ஆட்சி செய்து வந்துள்ளனர். அவர்களின் கட்டுப்பாட்டில்தான் இம்மலைவாழ் மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது ஜாகீர்தார்களை ஒழித்துவிட்டு அவர்களின் சொத்துகளை நாட்டுடமையாக்கினார். அப்போது இந்த மலைப்பகுதியின் நிலங்கள் வனத்துறைக்கு உரிமையானதாக மாறிவிட்டது. இதனால் அதிகம் பாதிக்கப்பட்டது மலைவாழ் மக்கள். மலையில் இருந்து பழங்குடியின மக்களை விரட்ட வனத்துறை மூர்க்கமாக செயல்படத் துவங்கியது.
காட்டை திருத்தி நிலமாக்கி வானம் பார்த்த பூமியில் விவசாயம் செய்துவந்த பழங்குடியின மக்களை விவசாயம் செய்யக்கூடாது என தடுத்தனர். காட்டுக்குள் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்லவும், சுள்ளி எடுக்கவோ, தேன் எடுக்கவோ செல்லக்கூடாது என்றது. சிறிய செடிகளை பிடுங்கினாலும் பல ஆயிரம் முதல் லட்ச ரூபாய் வரை அபராதம் விதித்தனர். தொட்டதுக்கெல்லாம் அபராதம்.
இதனால் வாழ்ந்த இடத்தை விட்டு கர்நாடகாவின் மைசூர், கேரளாவுக்கு தேயிலை தோட்டத்திற்கும், ரப்பர் தோட்டங்களுக்கும் வேலைக்கு செல்லத் துவங்கினார்கள். எங்கே வேலை கிடைக்குதோ அங்கே போய் வேலை செய்யறதுன்னு இடம்மாறி, இடம்மாறி நாடோடி மாதிரி வாழத் தொடங்கினர். இதனால் இவர்களின் பிள்ளைகள் படிக்க முடியாத சூழ்நிலை உருவானது. அரசின் வாய்ப்புகள் மலைகளில் ஓரளவு இருந்தும் வனத்துறை சட்டத்தால் இரண்டு தலைமுறைகளாக இம்மக்கள் இழந்தது அதிகம். எங்கள் முன்னோர்கள் பயிர் செய்த நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என கடந்த 50 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர். அந்த கோரிக்கை 50 ஆண்டுகாலத்துக்கு பின்னர் நிறைவேறியுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவுப்படி அமைச்சர் எ.வ.வேலு, எம்.எல்.ஏ உதயசூரியன் மற்றும் அதிகாரிகள் முதற்கட்டமாக கல்வராயன் மலை மக்கள் 4302 பழங்குடியின மக்களுக்கு நிலங்களுக்கான வன உரிமை சான்றிதழ் வழங்கியுள்ளார். அதோடு மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயப் பொருட்கள், மகளிர் மேம்பாட்டுத்துறை சார்பில் தையல் இயந்திரம், மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடனுதவி என 118 கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் வழங்கினார்.