Skip to main content

'இளைஞர்களுக்கு போராட்டம் தான் முழுநேர வேலை' - வழக்கறிஞர் ராஜு பேச்சு!

Published on 25/02/2020 | Edited on 25/02/2020

திருச்சியில் மக்கள் அதிகாரம் சார்பில் உழவர் சந்தையில் குடியுரிமை திருத்த சட்டதிற்கு எதிராக நடைபெற்ற அஞ்சாதே போராடு என்கிற பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் மக்கள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு பேசும்போது, "ஒவ்வொரு மாநிலத்துக்கேற்ற ஜனநாயகம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு  ஊருக்கும் ஜனநாயகம் மாறுகிறது. ஸ்டெர்லைட் எதிர்த்து உயிர் கொடுத்து போராடினார்கள். போராடியவர்களை தேசத்துரோகிகள் என்று குரல் கொடுக்கிறார்கள் பாஜகவும் இந்து முன்னணியும்.

 

Advocate Raju  about caa

 



சங்பரிவாரம் அகண்ட பாரதம் விரும்புகிறது. ஒற்றை வரி, ஒற்றை கலாச்சாரம், ஒரே நாடு ஆக்கிவிட விரும்புகிறது. அதை கொண்டு வர முடியாது. காரணம் கோமாதா Vs காளை அடக்குபவர்களுக்குமான போராட்டம் இங்கு நடக்கிறது. மக்கள் ஒன்றுபடுத்த தலைவனில்லை. கட்சியில்லை. 2020ல் காந்தி இருந்த போது ஏற்பட்ட நிலைமை இருக்காது. எட்டு வழிச்சாலை, ஸ்டெர்லைட், கதிராமங்கலம், நெடுவாசலில் மக்களே போராடினார்கள். முறியடித்தனர். இந்த பிரச்சனைகளுக்கு பல்வேறு அமைப்புகள் துணை நின்றார்கள் நாமும் சேர்ந்து அவர்களுக்காக போராடினோம்.

வழக்கு சுமந்தோம், சிறை சென்றோம். எந்த தலைவர்கள் வந்தார்கள். பாஜக, அதிமுக வர வேண்டாம் என்பதானால் திமுக 39 எம்பி வெற்றி பெற்றனர். இதனால் திமுக முன்னெச்சரிக்கையாக 2 கோடி கையெழுத்து பெற்றது. சிஏஏ அமல்படுத்த மாட்டோம் என அறிவிக்க தமிழக அரசுக்கு என்ன தயக்கம் என்று தெரியவில்லை. இன்னும் ஒரு வருடத்தில் ஆட்சி முடிய போகிறது எடப்பாடி மக்கள் மத்தியில் வந்தே ஆக வேண்டும்.

மக்களை சந்திக்க வரும் அதிமுக அமைச்சர்களை கேள்வி கேளுங்கள். தற்போது பொருளாதார நெருக்கடி உள்ளது. பட்ஜெட்டில் பற்றாக்குறை பட்ஜெட் தான் உள்ளது. உற்பத்தி மந்த நிலை. வியாபாரம் இல்லை. 5 மில்லியன் பொருளாதார வளர்ச்சி சாத்தியமில்லை. பொதுதுத்துறை தனியார் மயமாகும். இப்படி இந்தியாவில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.

 



நேருக்கு நேராக போராடி  மோடி, அமித்ஷா, ஆர்எஸ்எஸ் கும்பலை ஆட்சி அதிகாரத்திலிருந்து விரட்டாமல் வேறு வழிஇல்லை. இனி இளைஞர்களுக்கு போராட்டம் தான் முழுநேர வேலை, பெண்கள், உழைக்கும் மக்கள் போராட வாருங்கள். எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு வாருங்கள். வண்ணாரப் பேட்டையில் மறியல் போராட்டத்தை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் மறியல் போராட்டம் நடக்கிறது.

கோலம் போட்டவர்களை கைது செய்கிறார்கள். காவல் துறை தடை, நீதிமன்ற தடைக்கு பிறகு தான் போராட்டம் தொடர்கிறது. காஷ்மீரில்  மக்களை சிறை வைத்தனர். அப்போதும் எழுச்சி ஏற்படவில்லை,  பாபர் மசூதி தீர்ப்பின் போது எழுச்சி வர வில்லை. புதிய கல்வி கொள்கை, உபா சட்டத் திருத்தம் என எப்போதும் எழுச்சி வரவில்லை. தற்போது இந்த குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்து தலித், ஆதிவாசி, முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் என மொத்த மக்களையும் ஒழிப்பதே இவர்களின் நோக்கம். மக்களை அச்சுறுத்தி பதட்டத்தில் வைத்திருப்பதே பாசிசம். அதை நிறைவேற்ற எதை வேண்டுமானாலும் செய்யும்.

போராட்டமே இதற்கு தீர்வு. உச்ச நீதிமன்ற நீதிபதியே இங்கு வந்து ஜநாயகத்தை காப்பாற்றும் போராட அழைப்பு விடுத்து பேசி இருக்கிறார்.
உயர்நீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் சென்னையில் அரசியல் சட்டத்தை காப்பாற்ற மனித சங்கிலியாக கைகோர்த்து நிற்கிறார்கள். ஒன்றுபட்ட போராட்டமே தீர்வு. சிஏஏவை வைத்து மக்களை பிரித்து பாசிசத்தை செயல்படுத்தலாம் என ஆயுதத்தை ஏவியிருக்கிறார்கள். அதே ஆயுதத்தை வைத்து ஆர்எஸ்எஸ் , பாஜக கும்பலை ஆட்சியிலிருந்து மட்டுமல்லாமல் சமூகத்திலிருந்து துடைத்து எறிவது தான் இந்த மாநாட்டின் நோக்கம்" எனத் தெரிவித்தார்.

நிகழ்ச்சி முடிவில் மக்கள் பாடகர் கோவன் தலைமையில் மக்கள் கலை இலக்கிய கழகம் சிறப்பான பாடல் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்.

 

 

சார்ந்த செய்திகள்