தமிழகத்தில் பருவ மழையையொட்டி, ஆங்காங்கே கால்வாய் மற்றும் வாய்க்கால் தூர்வாரும் பணி மாவட்ட நிர்வாகத்தால் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. திருச்சி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கனத்த மழை பெய்யத் துவங்கி இன்று அதிகாலை வரை பெய்தது. திருச்சி மாவட்டத்தில் நேற்று இரவு மட்டும் பரவலாக 376.30 மி. மீ மழை பதிவாகி உள்ளது. அதே வேளையில் திருச்சி மாநகரம் முழுவதும் ஆங்காங்கே உள்ள காலியான இடங்களில் மழைநீர் தேங்கி நிற்பதோடு, கொசுக்கள் உற்பத்தி அதிகமாகி டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ தொடங்கி உள்ளது. திருச்சி மாவட்டத்தில் இதுவரை 16 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் எஸ்.சிவராசு தலைமையில் நடந்தது. கூட்டத்தில் சுகாதாரத்துறை, மருத்துவத்துறை, மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். அப்போது காலி இடங்களில் தண்ணீர் தேங்க விடாமல் தடுப்பது என்றும், வீடுகளில் பழைய டயர், பாத்திரங்களை அப்புறப்படுத்துவது, கொசு மருந்து அடிப்பதைத் தீவிரப்படுத்த வேண்டும் எனவும் கலெக்டர் அறிவுரை வழங்கினார். கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், இணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) லெட்சுமி, துணை இயக்குநர் சுப்பிரமணி, அரசு மருத்துவமனை டீன் டாக்டர் வனிதா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கங்காதாரிணி, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) காளியப்பன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.