உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.