கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 5 பெண்கள் உட்பட 58 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க தவறியதாக தமிழக அரசைக் கண்டித்து கள்ளக்குறிச்சியில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.
அப்போது அவர் பேசுகையில், “கள்ளக்குறிச்சியில் நடந்த துயரமான சம்பவம் மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அளிக்கிறது. திமுக பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் போதைப்பொருள் விற்பனை மற்றும் கள்ளச்சாராய மரணம் அதிகரித்துள்ளது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தைக் கண்டித்து மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காற்றை எப்படி தடை செய்யமுடியாதோ அதே போன்று மக்கள் உணர்வுகளுக்குத் தடை விதிக்க முடியாது. அதிமுக ஆர்ப்பாட்டத்திற்கு இடையூறு செய்து முதல்வர் அடக்குமுறையைக் கையாளுகிறார்.
நான் ஒரு மருந்து பெயரைச் சொன்னேன். அந்த மருந்தை வைத்து அமைச்சர் மா.சுப்பிரமணியம் என்னைக் கிண்டல் செய்கிறார். ஒன்றும் தெரியாமல் இருக்க நான் ஒன்றும் ஸ்டாலின் அல்ல. இப்படிப்பட்ட அமைச்சர்கள் இருக்கும் வரை இந்த நாட்டை எவராலும் காப்பாற்ற முடியாது. காவல் நிலையம், நீதிமன்றம் அருகிலேயே கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுகிறது. கள்ளச்சாராய மரணம் தொடர்பான விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும். அரசின் அழுத்தத்தால் தான் மாவட்ட ஆட்சியர் தவறான தகவலைக் கூறினார்.
கள்ளக்குறிச்சி உயிரிழப்பு விவகாரத்திற்கு திமுக அரசு தான் காரணம். இந்த விவகாரத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டு கொள்ளவில்லை. ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு வருபவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்துகிறார்கள். அடக்குமுறையை கண்டு அஞ்சுபவர்கள் அதிமுகவினர் அல்ல. கள்ளச்குறிச்சி சம்பவத்தில் நீதி கிடைக்க வேண்டும் ஆனால் இங்குள்ள காவல்துறை, தனி நபர் ஆணையம் மூலம் நீதி கிடைக்காது. கள்ளக்குறிச்சி விவகாரத்திற்கு சிபிஐ விசாரணை வேண்டும் எனவே கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை நாளை (25.06.2024) அதிமுக குழு சந்திக்கிறது” எனத் தெரிவித்தார்.