அ.தி.மு.க. கட்சி விதிகளில் திருத்தங்கள் செய்யத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை விவகாரம் அக்கட்சியினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தங்களது இல்லங்களில் ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திலும் முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ராம்குமார் ஆதித்தன், சுரேன், கே.சி.பழனிச்சாமி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க. கட்சி விதிகளில் திருத்தங்கள் செய்யத் தடை விதிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், "ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை அ.தி.மு.க.வில் உருவாக்கியது சட்ட விதிகளுக்கு எதிரானது. செயற்குழு, பொதுக்குழு கூட்டங்களை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி நடத்த தடை விதிக்க வேண்டும். அ.தி.மு.க.வில் இருந்து உறுப்பினர்களை நீக்கவும், புதிதாக சேர்க்கவும் தடை விதிக்க வேண்டும்" என்று கோரியுள்ளனர்.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.