Skip to main content

தர்மயுத்தம் 2.0; “தொண்டர்களும் இணைந்து இயக்கத்தை வலுப்படுத்துவார்கள்” - ஓபிஎஸ்

Published on 04/11/2022 | Edited on 04/11/2022

 

admk ops pressmeet; Efforts to strengthen the movement together with volunteers!

 

அ.தி.மு.கவில் ஒற்றைத் தலைமை தொடர்பான விவாதங்கள் எழுந்து தற்போது ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி எனப் பிரிந்து செயல்பட்டு வருகிறது. அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வரும் ஓபிஎஸ் அவரது ஆதரவாளர்களையும் சந்தித்து வருகிறார்.

 

இந்நிலையில், நேற்று கோவை செல்வராஜ் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்தினைச் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பிற்குப் பிறகு கட்சி நிர்வாகிகளுடன் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “அதிமுக சட்ட விதிகளைச் சுயநலத்திற்காக அவர்கள் திருத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் பல பிரச்சனைகள் உருவாகியுள்ளது. இன்று நாம் எம்ஜிஆர் வகுத்துக்கொடுத்த சட்டவிதிகளின் படி கழகம் நடைபெற வேண்டும் என்று தர்மயுத்தத்தைத் துவங்கியுள்ளோம். புதிதாக சில விதிகளை அங்கு உள்ளே புகுத்தி இருக்கிறார்கள். 

 

எம்ஜிஆர் வகுத்த விதியில் சாதாரணத் தொண்டன் கூட கழகத்தின் உச்சத்திற்கு வரலாம் என்ற விதி இருக்கிறது. அதனால் தான் ஓபிஎஸ், ஈபிஎஸ் முதலமைச்சராக வர முடிந்தது. மேலும், ஓபிஎஸ் கழகத்தின் ஒருங்கிணைப்பாளராகவும், ஈபிஎஸ் கழகத்தின் இணை ஒருங்கிணைப்பாளராகும் வரக் கூடிய சூழ்நிலை இருந்தது. ஆனால், கழகத்தின் இன்றைய நிலையில் தலைமைப் பொறுப்பிற்கு வர வேண்டுமானால் 10 மாவட்டச் செயலாளர்கள் முன் மொழிய வேண்டும் என்றும், அவர் 5 ஆண்டுக்காலம் தலைமைக் கழகத்தின் நிர்வாகியாகவும் இருக்க வேண்டும் என்றும் சொன்னால் கோடீஸ்வரர் தான் அந்த பதவிக்கு வர முடியும் என்ற நிலை உருவாகும்” எனக் கூறினார்.

 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஓ. பன்னீர்செல்வம், “அ.தி.மு.கவை நிறுவிய எம்ஜிஆர் இதைத் தொண்டர்கள் இயக்கமாகத்தான் உருவாக்கினார்கள். ஜெயலலிதாவும் அதைப் பின்தொடர்ந்தார். இருவரும் மாபெரும் வலுவான இயக்கமாக உருவாக்கித் தொண்டர்கள் கையில் கொடுத்துள்ளார்கள். இன்றைக்கு இருக்கின்ற நல்ல சூழ்நிலையில் அதிமுகவில் இருக்கும் அத்தனை தொண்டர்களும் இணைந்து இந்த இயக்கத்தை மேலும் வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்