
”நாளை யார் யாருக்கு நிதி உதவி செய்யலாம்?” என்று முதல் நாளே அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பட்டியலிட்டு தயாராகிவிடுவார் போலும். தொகுதியில் இருக்கும் நாட்களிலெல்லாம், தேடித்தேடி உதவி செய்வதை வழக்கமாகவே வைத்திருக்கிறார். அந்த வகையில், மருத்துவம் மற்றும் வாழ்வாதாரத்துக்கு உதவிடும் விதத்தில், சிவகாசியில் இஸ்லாமியர்கள் மூவருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் வழங்கியிருக்கிறார்.
சிவகாசி-முஸ்லீம் தைக்கா தெருவைச் சேர்ந்த மதகுருவான முகமது யூசுப் (வயது 60), உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். சக்கரை வாவா தெருவைச் சேர்ந்த சிக்கந்தர் (வயது 83), 50 ஆண்டுகளுக்கும் மேலாக, பள்ளிவாசலில் ‘மோதினார்’ பணியைச் செய்து வந்தவர். முதுமையின் காரணமாக வறுமையில் வாடுகிறார். காயிதே மில்லத் தெருவைச் சேர்ந்த அப்துல் ஜப்பார் (வயது 62) அ.தி.மு.க.வில் நீண்டகால அடிப்படை உறுப்பினர். பிரிண்டிங் ஆப்செட் மெஷினில் வேலை பார்க்கும்போது, கை விரல்கள் துண்டாகி, மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். இம்மூவரையும் நேரில் சந்தித்து, தலா ரூ.1 லட்சம் வீதம், மொத்தத்தில் ரூ.3 லட்சத்தை, தனது சொந்த நிதியிலிருந்து வழங்கி உதவியிருக்கிறார், கே.டி.ராஜேந்திரபாலாஜி.
இதனால் நெகிழ்ந்துபோன ஜமாஅத் நிர்வாகிகள் “உதவி கேட்காமலே, இருப்பிடம் தேடி வந்து உதவி செய்கிறார் அமைச்சர். அவருக்கும் எங்களுக்கும் உள்ள தொப்புள்கொடி உறவு காலகாலத்துக்கும் தொடரும்.” என்றனர்.