Skip to main content

செம்மரக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய அ.தி.மு.க. நிர்வாகி வெட்டிக் கொலை! 

Published on 17/08/2023 | Edited on 17/08/2023

 

ADMK Member Padiyanallur Parthiban passes away police investigation

 

திருவள்ளூர் மாவட்டம், பாடியநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன் (54). முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரான இவர், அ.தி.மு.க.வின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அம்மா பேரவையின் இணைச் செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். இந்த நிலையில், இன்று காலை வழக்கம் போல் வீட்டில் இருந்து புறப்பட்டு அப்பகுதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவில் வளாகத்தில் நடைப் பயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது, மூன்று இரு சக்கர வாகனத்தில் வந்த ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரைச் சுற்றி வளைத்து, அரிவாளால் சரமாரியாக வெட்டிச் சாய்த்து விட்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றது. 

 

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள், ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அதிமுக நிர்வாகி பார்த்திபனை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்த தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த செங்குன்றம் காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைச் சேகரித்து, தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட அதிமுக பிரமுகர் பார்த்திபன் மீது செம்மரக் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆந்திர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு ஏற்கனவே குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டவர். தற்போது அவர் பிணையில் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

செம்மரக் கடத்தல், ரியல் எஸ்டேட் ஆகியவற்றில் ஏற்பட்ட முன் பகை காரணமாகக் கொலை  நடந்ததா? அல்லது தேர்தல் முன்பகை காரணமாக அவர் கொல்லப்பட்டாரா? என்ற பல கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் ஆவடி மாநகர காவல் இணை ஆணையர் விஜயகுமார், நிகழ்விடத்திற்கு வந்து நேரடி விசாரணை நடத்தினார். செம்மரக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய அ.தி.மு.க. நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்