தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்புக்குப் பின், அ.தி.மு.க., பொதுச் செயலராக சசிகலா நியமிக்கப்பட்டார். இந்த நியமனம் செல்லாது என 2017ல் நடந்த அ.தி.மு.க., பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரி, சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில், சசிகலா வழக்கு தொடர்ந்தார். சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி தரப்பில், இடையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஜே.ஸ்ரீதேவி முன் நடந்து வருகிறது.
இடையீட்டு மனு மீதான வழக்கில், அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், இம்மாதம் 8ம் தேதி, தீர்ப்புக்காக பட்டியலிடப்பட்டது. ஆனால், நீதிபதி விடுப்பில் சென்றதால், தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது. இந்த மனு மீது, இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில் இன்று காலை விமானம் மூலம் திருச்சி வந்து சேர்ந்த சசிகலா முதலாவதாக சமயபுரம் டோல்கேட் பகுதியில் உள்ள உத்தமர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து அங்கிருந்து புறப்பட்டு தற்போது திருவாச்சூர் கோவிலுக்கு சென்றுள்ளார். மேலும் இன்று நாமக்கல் வழியாக சேலம் எடப்பாடி வரை உள்ள கோவில்களில் சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.