திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ஒன்றிய அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஒன்றிய செயலாளர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மாவட்டச் செயலாளர் மருதராஜ், நிலக்கோட்டை எம்எல்ஏ தேன்மொழி சேகர் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சி மேடையில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும் போது, வரியே இல்லாத பட்ஜெட்டை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இதனை அனைவரும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் எதிர்க் கட்சியான திமுக குடியுரிமை திருத்த சட்ட பிரச்சனையை கையில் எடுத்துக்கொண்டு அதனை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறார்கள். சட்டமன்றத்தில் இதுகுறித்த விவாதத்தில் தமிழக இஸ்லாமியர்கள் யாராவது குடியுரிமைச் திருத்தச்சட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என எடப்பாடி பழனிச்சாமி கேட்டதற்கு ஸ்டாலினிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. எதற்கெடுத்தாலும் இந்த ஆட்சி கவிழ வேண்டும், ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டும் என்றே ஸ்டாலின் புலம்பிக் கொண்டிருக்கிறார்.
மத்திய அரசுக்கு ஏன் ஜால்ரா போடுகிறீர்கள் என்று கேட்கிறீர்கள். ஜால்ரா போடாட்டி 11 மருத்துவக் கல்லூரி தமிழ்நாட்டில் கொண்டு வர முடியுமா? எதற்கெடுத்தாலும் போராட்டம் பிரச்சனை என பொதுமக்களை தூண்டிவிட்டு இந்த ஆட்சியை அகற்றிவிட துடிக்கிறார்கள். கடந்த முறை ஊட்டி, நீலகிரி போயிருந்தபோது காலில் மாட்டிக்கிட்ட ஒரு குச்சியை அங்கிருந்த என் பேரனைப் போல் உள்ள ஒரு சிறுவனை அழைத்து எடுத்துவிட சொன்னேன் அது பெரிய விஷயமா பிளாஸ் பண்ணி விட்டுட்டாங்க. இதப்பத்தி ஸ்டாலின் கிட்ட செய்தியாளர்கள் கேட்கபோனா சீனிவாசன் செய்தது மாபெரும் தவறு இந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என்று சொல்கிறார்... ஏன்யா? காலில் மாட்டி இருந்த குச்சியை எடுத்து விடச் சொன்னது குத்தமாயா, அதுக்காக இந்த ஆட்சியை கலைக்க சொல்லுவீங்க. குடியுரிமை திருத்த சட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு ஒரு பாதிப்பு என்றால் அவர்களை காப்பாற்ற முதலில் நிற்பது அதிமுகதான் என்று கூறினார்.
இக்கூட்டத்தில் நகர ஒன்றிய பொறுப்பாளர்களுடன் பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.