Skip to main content

அ.தி.மு.க. முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவாரா? தலைமை அலுவலகம் முன் குவியும் தொண்டர்கள்!

Published on 07/10/2020 | Edited on 07/10/2020

 

ADMK CM CANDIDATE EPS OPS DISCUSSION

 

அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் இன்று அறிவிக்கப்படுவாரா என தொண்டர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பேச்சுவார்த்தையில் இழுபறி என்பதால் அதிகாலை 03.00 மணி வரை துணை ஓ.பி.எஸ். உடனான ஆலோசனை நீடித்துள்ளது.

 

முதல்வர் வேட்பாளராக பழனிசாமி அறிவிக்கப்படுவாரா? வழிகாட்டு குழு அமைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதேபோல் வழிகாட்டுதல் குழுவில் ஓ.பி.எஸ். தரப்பில் 5 பேர், ஈ.பி.எஸ். தரப்பில் 6 பேர் இடம்பெறுவார்களா எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

கடந்த செப்டம்பர் 28- ஆம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க. செயற்குழுவில் முதல்வர் வேட்பாளர் குறித்து காரசார விவாதம் நடந்தது. காரசார விவாதத்திற்கு பிறகு ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்.சை சந்தித்து அமைச்சர்கள், நிர்வாகிகள் மாறி மாறி ஆலோசித்தனர்.

 

இதனிடையே, ஓ.பி.எஸ். உடன் ஆலோசனை நடத்திய துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் அதிகாலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது; "இன்று காலை 10.00 மணிக்கு நல்ல செய்தி வரும்; மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி வருவதற்கான ஆக்கப்பூர்வ பணி நடக்கிறது" என்றார்.

 

இந்த நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்துக்கு செல்லவிருப்பதாகவும், அங்கு நடைபெறும் ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்கள் உடனான சந்திப்பில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், அக்கட்சியின் தொண்டர்கள் தலைமை அலுவலகம் முன்பு குவிந்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்