கிருஷ்ணகிரி பூங்கா அருகே நடைபெற்ற கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளரும், தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, "அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க. அரசு விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தி.மு.க. அரசு மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. தி.மு.க. அரசு சொத்துவரி, வீட்டு வரி, மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி மக்களை வஞ்சித்துள்ளது.
அ.இ.அ.தி.மு.க. பலம் பொருந்திய, வலிமையான இயக்கமாக உள்ளது. சோதனைகள் அனைத்தையும் சாதனை படிக்கட்டாக்கிய வரலாறு அ.தி.மு.க.வுக்கு உண்டு. தேர்தல் சமயத்தில் சில துரோகிகள் அ.தி.மு.க.விற்கு தடையாக இருந்து சதி செய்ததால் தி.மு.க. வெற்றி பெற்றது. யார் துரோகிகள் என்பதை தொண்டர்கள் உணர்ந்துவிட்டதால் அ.தி.மு.க.வை அழிக்க எந்த கொம்பனாலும் முடியாது.
தி.மு.க. ஆட்சியில் சர்வ சாதாரணமாக போதைப் பொருள் கிடைக்கிறது; ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் பல உயிர்கள் பறிபோகி, பல குடும்பங்கள் சொத்துகள் இழந்தும் நடவடிக்கை இல்லை. எதிர்காலத்தில் தி.மு.க. எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட பெற முடியாது. அ.தி.மு.க. ஆட்சியில்தான் அதிகமான அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக், சட்டக்கல்லூரிகள் கொண்டு வரப்பட்டன" எனத் தெரிவித்துள்ளார்.