சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றுவந்த தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவுபெறுகிறது. நடப்பு கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று (13/09/2021) பல்வேறு முக்கிய அறிவிப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீட் நுழைவுத் தேர்வு தொடர்பாக, சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
அப்போது பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "ஜெயலலிதா இருக்கும்போதுகூட நீட் தேர்வு வரவில்லை. நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கோரும் மசோதாவை தாக்கல் செய்ய உள்ளேன். வாணியம்பாடி கொலை போன்ற சம்பவங்கள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்படும்" என்றார்.
இதனிடையே, சட்டப்பேரவையில் இருந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "வாணியம்பாடியில் மஜக நிர்வாகி கொலை, நீட் விவகாரம் குறித்து பேரவையில் பேச முயன்றேன். கொலை செய்யப்பட்ட மஜக நிர்வாகியின் குடும்பத்துக்குத் தேவையான உதவிகளை செய்ய வேண்டும். திமுக ஆட்சி அமைந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சொல்லியிருந்தார். நீட் தேர்வு நடக்குமா? நடக்காதா? என்று தெரியாமல் மாணவர்களும், பெற்றோர்களும் குழப்பமடைந்துள்ளனர். நீட் தேர்வு பிரச்சனையில் அரசு தெளிவான முடிவெடுத்து சொல்லவில்லை.
தமிழ்நாடு அரசு மட்டும்தான் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுவருகிறது. நீட் தேர்வு அச்சம் காரணமாக உயிரிழந்த தனுஷ் என்ற மாணவரின் தற்கொலைக்கு அரசுதான் பொறுப்பு. மாணவர் தற்கொலை தொடர்பாக அரசு உரிய விளக்கம் அளிக்காததால் வெளிநடப்பு செய்துள்ளோம். நீட் தேர்வு வேண்டாம் என்று அதிமுக அரசு தீர்மானம் கொண்டுவந்தபோது எதிர்த்த திமுக, தற்போது மசோதாவை தாக்கல் செய்கிறது. நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை அதிமுக ஆதரிக்கும்" என தெரிவித்தார்.