நீட் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை; தமிழக மாணவர்கள் தலையில் பேரிடி; பழ.நெடுமாறன் கண்டனம்
நீட் தேர்வின் அடிப்படையில் மட்டுமே மருத்துவக் கல்லூரிக்கு மாணவர்களைச் சேர்க்க முடியும் என உச்ச நீதிமன்றம் பிறப்பித்திருக்கும் ஆணை தமிழக மாணவர்களின் தலையில் பேரிடியாக இறங்கியுள்ளது என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மத்திய அரசின் ஏமாற்று நாடகப் போக்கையும் அதை நம்பிச் செயல்பட்ட தமிழக அரசின் ஏமாளித்தனமான நடவடிக்கைகளுமே இதற்குக் காரணமாகும். 5 மாத காலத்திற்கு முன்னால் தமிழக சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் இணைந்து நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கும் சட்டத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.
ஆனால் அதற்கு ஒப்புதல் கிடைக்கவில்லை. மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நீட் தேர்விலிருந்து ஓராண்டிற்கு மட்டும் விலக்கு அளிக்கும் வகையில் மாநில அரசு அவசரச் சட்டம் இயற்றினால் மத்திய அரசு உதவி செய்யும் என அறிவித்தார். அதன்படி சட்டமியற்றப்பட்டு மத்திய அரசிற்கு அனுப்பப்பட்டது. இதற்கும் ஒப்புதல் கிடைக்கவில்லை.
உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் வாதாடிய அரசு வழக்கறிஞர் "குறிப்பிட்ட மாநில மாணவர்களுக்கு மட்டும் விதி விலக்கு அளிக்கக்கூடாது'' என மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது என தெரிவித்ததை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டு ஆணைப் பிறப்பித்துள்ளது.
இதன் விளைவாக தமிழகத்தில் மாநில அரசு பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு எதிர்காலத்தில் மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளில் இடம் கிடைக்காது என்ற நிலை உருவாகி அதன் விளைவாக மாணவர்கள் சி.பி.எஸ்.இ. திட்டத்திற்கு மாறுவார்கள் என்பதில் ஐயமில்லை.
தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் உள்ள அரசு ஒதுக்கீடு இடங்களிலும் 4,270 மாணவர்களை சேர்க்கலாம். உச்சநீதிமன்றத்தின் ஆணையின் விளைவாக இவற்றில் 500க்கும் குறைவான இடங்களே தமிழகப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்குக் கிடைக்கும். தமிழகத்தில் சி.பி.எஸ்.இ. மாணவர்கள் 15% த்திற்கும் குறைவானவர்கள் என்பதால் பெரும்பாலான இடங்கள் பிற மாநில மாணவர்களுக்குக் கிடைக்கும். இதன் விளைவாக தமிழக அரசின் செலவில் பிற மாநில மாணவர்கள் படித்து மருத்துவப் பட்டம் பெற்று தமிழக மக்களுக்குத் தொண்டாற்ற மாட்டார்கள். அவரவர்களின் மாநிலங்களுக்குச் சென்று அந்த மக்களுக்குத் தொண்டாற்றுவார்கள்.
தமிழகத்திலுள்ள பிற்பட்ட, ஒடுக்கப்பட்ட மற்றும் ஏழை மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு என்றைக்கும் எட்டாத ஒன்றாகிவிடும். தமிழ் வழிக் கல்வி என்பது அடியோடு குழிதோண்டிப் புதைக்கப்படும். மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியை மத்திய, மாநில பொதுப்பட்டியலுக்கு மாற்றியதே இத்தனைத் தவறுகளுக்கும் காரணமாகும். எனவே மாநிலப் பட்டியலில் மட்டும் கல்வி மீண்டும் சேர்க்கப்பட்டால் ஒழிய இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு என்பது கிடையாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.