Skip to main content

10.5% உள் ஒதுக்கீடு வழக்கு; விரைவில் வெளியாகும் தீர்ப்பு!

Published on 23/02/2022 | Edited on 23/02/2022

 

fg

 

கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கி கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு ஆளுநரின் ஒப்புதலுடன் சட்டம் இயற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு, சட்டத்தை அமல்படுத்தியது. இந்த சட்டத்தை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ”மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20% ஒதுக்கீட்டில் வன்னியருக்கு 10.5% உள்ஒதுக்கீடு தந்தது செல்லாது” எனத் தீர்ப்பளித்து தமிழ்நாடு அரசின் வன்னியருக்கான் இடஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்தனர். இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

 

அந்த மேல்முறையீட்டு மனுவில், " நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டை மீறாமல் 10.5 சதவீத இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்பட்டுவந்த இடஒதுக்கீட்டில்தான் உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த உள்ஒதுக்கீடு வன்னியர் சமுதாயத்திற்கானது மட்டுமல்ல, 7 பிரிவினருக்கானது. அரசியலமைப்பு சட்டத்தின்படி உள்ஒதுக்கீடு தந்து சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஏற்கனவே முஸ்லிம் பிரிவினருக்கும், அருந்ததியினர் பிரிவினருக்கும் உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. கல்வி, வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் வன்னியருக்கு உள்ஒதுக்கீடு தரப்பட்டது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்றைய விசாரணையில் இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் தீர்ப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்