தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, துறை மீதான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன. நேற்று (08.09.2021) தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
அவர் அறிவித்ததாவது, “ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கிவரும் 150 பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள் மற்றும் ஆய்வக கட்டடங்கள் கட்டப்படும். ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் ரூ. 25 கோடி மதிப்பீட்டில் 20 சமுதாய கூடங்கள் கட்டப்படும். 1,000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்குத் துரித இணைப்பு திட்டத்தின் (தட்கல்) கீழ் ரூ. 23.28 கோடி செலவில் 90% மானியம் வழங்கப்படும். காஞ்சி மாவட்டத்தில் வீடற்ற இருளர் இன பழங்குடியினருக்கு ரூ. 13.29 கோடி செலவில் 443 புதிய வீடுகள் கட்டப்படும். ஆதிதிராவிடர் விடுதி மாணவர்களுக்கு விழா நாட்களில் வழங்கப்பட்டுவரும் சிறப்பு உணவுக் கட்டணம் இருமடங்காக உயர்த்தி வழங்கப்படும். 2 ஆயிரம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு நீர்ப்பாசனத்துக்கான பிவிசி குழாய்கள் வாங்குவதற்கு தலா ரூ. 15 ஆயிரம் மானியம் வழங்கப்படும். மேலும், 2 ஆயிரம் விவசாயிகளுக்குப் புதிய மின் மோட்டார் வாங்க தலா ரூ. 10 ஆயிரம் மானியம் வழங்கப்படும். 5 ஆயிரம் தொழில்முனைவோருக்கு ரூ. 2 கோடியில் தொழில் மேலாண்மை பயிற்சிகள் அளிக்கப்படும். பயிற்சி மற்றும் சான்றிதழ் பெற்ற பழங்குடியின பாரம்பரிய சமூக சுகாதார திறனாளர்கள் 100 பேருக்கு சுயமாக தொழில் தொடங்க தலா ரூ. 50 ஆயிரம் மானியம் வழங்கப்படும்” உள்ளிட்ட அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.