தமிழ்நாட்டை சேர்ந்த நிர்மலா சீதாராமன் ராணுவ மந்திரியாக கூடுதல் இலாகா ஒதுக்கீடு
புதிய மந்திரிகள் பதவி ஏற்பு விழா ஜனாதிபதி மாளிகையில் நேற்று காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. இதில் மந்திரிசபையை மாற்றி அமைப்பதற்கு வசதியாக நேற்று முன்தினம் கேபினட் மந்திரியான கல்ராஜ் மிஸ்ராவும், ராஜாங்க மந்திரிகளான ராஜீவ் பிரதாப் ரூடி, பக்கன் சிங் குலாஸ்டே, சஞ்சீவ் குமார் பல்யான், பண்டாரு தத்தாத்ரேயா, மகேந்திரநாத் பாண்டே ஆகியோரும் ராஜினாமா செய்தனர்.
இதைத்தொடர்ந்து பாரதீய ஜனதாவைச் சேர்ந்த அஸ்வினி குமார் சவுபே (பீகார்), சிவ் பிரதாப் சுக்லா (உத்தர பிரதேசம்), வீரேந்திர குமார் (மத்திய பிரதேசம்), ராஜ் குமார் சிங் (பீகார்), அனந்த குமார் ஹெக்டே (கர்நாடகம்), முன்னாள் வெளியுறவு அதிகாரி ஹர்தீப் சிங் புரி, கஜேந்திர சிங் செகாவத் (இருவரும் ராஜஸ்தான்), மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் சத்யபால் சிங் (உத்தரபிரதேசம்), முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி அல்போன்ஸ் கன்னன்தானம் (கேரளா) ஆகியோரை புதிய மந்திரிகளாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் நியமித்தார்.
புதிய மந்திரிகள் நியமனத்தை தொடர்ந்து, மந்திரிகளின் இலாகாக்கள் மாற்றி அமைக்கப்பட்டது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நிர்மலா சீதாராமனுக்கு பிரதமர் மோடி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ இலாகாவை ஒதுக்கி இருக்கிறார். முன்னர் இந்த இலாகாவை மனோகர் பாரிக்கர் கவனித்து வந்தார். அவர் கோவா முதல்-மந்திரி ஆனதால் ராணுவ இலாகாவை நிதி மந்திரி அருண் ஜெட்லி கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். இப்போது அந்த இலாகா நிர்மலா சீதாராமனுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் இந்திரா காந்திக்கு பிறகு ராணுவ மந்திரி என்ற பெருமையை பெறும் 2-வது பெண் நிர்மலா சீதாராமன் ஆவார்.