தகுதி நீக்கம் செய்யப்பட்ட டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை நேற்று இரவு வரை 13 ஆக இருந்தது. இன்று அதிகாலை சுமார் மூன்று மணி அளவில் குடியாத்தம் எம்.எல்.ஏ ஜெயந்தி பத்மநாதனும், பின்னர் ஆறு மணிக்கு எம்.எல் .ஏ ஏழுமலை இருவரும் வந்தனர். இதனால் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது. இத்துடன் நிலக்கோட்டை எம்.எல்.ஏவும் இன்னொரு எம்.எல்.ஏவும் தாங்கள் குடும்ப சூழல் காரணமாக அங்கு வரமுடியாத நிலை இருக்கிறது என்று தங்கத்தமிழ்செல்வன் எம்.எல்.ஏவுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனிடையே இன்று காலையில் தங்கத்தமிழ்செல்வன், எம்.எல்.ஏ மாரியப்பன், பிரபு மற்றும் பாதுகாவலர்களுடன் ஐந்தருவி சாலையில் நடைபயணம் சென்றார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசிய தங்கத்தமிழ்செல்வன்,
போலீஸ் பயம் காரணமாக 18 எம்.எல்.ஏக்கள் குற்றாலத்தில் தங்கியுள்ளனர் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். நாங்கள் யாருக்கும் பயப்படவில்லை ஓய்விற்காக வந்த நாங்கள் தாமிரபரணியில் புஷ்கர நீராடினோம். முதலில் அமைச்சர் ஜெயக்குமார் தன்னை குற்றமற்றவர் என்று நிரூபிக்கட்டும் பின்னர் பேசட்டும். தீர்ப்பு எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது அதை கண்டு நாங்கள் கலங்குவதில்லை. எங்கள் தொகுதிகளில் வளர்ச்சி பணிகளை அரசும் செய்யவில்லை, எங்களையும் அரசு செய்யவிடவில்லை. எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்த முடியாமல் இருக்கிறது. தீர்ப்பு பாதமாக வந்தால் எங்கள் ஆட்சி தொடரும் என்று சொல்கிறார்கள் ஆனாலும் அம்மா ஆட்சி வரும் அதில் 5 அமைச்சர்கள் நீக்கப்படுவார்கள். ஆரம்பத்தில் ஓபிஎஸ்ஸைதான் டிடிவி முதலமைச்சர் ஆக்கினார், பின்னர் சின்னம்மா எடப்பாடியை முதல்வராக்கினார். தீர்ப்பு எப்படி வரும் என்று தெரியாது. டிடிவி தினகரன் அநேகமாக வரும் 27-ஆம் தேதி குற்றாலம் வர உள்ளார். அதற்குள் தீர்ப்பு வந்தால் நாங்கள் சென்னை சென்றுவிடுவோம் என்றார் தங்கத்தமிழ் செல்வன்.
இதை அடுத்து தங்கத்தமிழ்செல்வனும் எம்.எல்.ஏ மாரியப்பனும் 11.30 மணி அளவில் சிவகங்கை மாவட்டம் காளையர் கோவிலில் இருக்கும் மன்னர் மருதுபாண்டியர் சிலைகளுக்கு மாலை மரியாதையை செலுத்துவதற்காக கிளம்பி சென்றனர்.