சேலம் மாவட்டத்தில் வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடாவைத் தடுக்க, கூடுதலாக 11 இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடிகளைத் திறக்க தேர்தல் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இந்நிலையில், தேர்தலில் தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வாக்காளர்களுக்குப் பணம், பரிசுப்பொருள்கள் வழங்கப்படலாம் என்பதால் இந்தமுறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
எந்த வகையிலும் பணப்பட்டுவாடா நடந்துவிடக்கூடாது என்பதற்காக, உரிய ஆவணங்களின்றி 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொண்டு செல்லப்படும் ரொக்கம், பரிசுப்பொருட்களைத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.
ஒவ்வொரு தொகுதியிலும் பறக்கும் படையினர் தீவிரமாக வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்புப் பணிக்கு சேலம் சரகத்திற்கு 5 கம்பெனி துணை ராணுவப்படையினர் வந்துள்ளனர். அவர்களும் சோதனைச் சாவடிகளில் உள்ளூர் காவல்துறையினருடன் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் பணப்பட்டுவாடாவைத் தடுக்க ஏற்கனவே 33 பறக்கும் படையும், 33 நிலை கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தலா 6 குழுக்கள் வீதம் 66 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் கடந்த ஒரு வாரமாக தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் கொளத்தூர், தீவட்டிப்பட்டி ஆகிய இரு இடங்களில் நிலையான சோதனைச் சாவடிகள் உள்ளன. இவை தவிர ஏற்காடு, அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, ஆத்தூர் உள்ளிட்ட இடங்களில் சோதனைச் சாவடிகளை ஏற்படுத்தி வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள 11 தொகுதியிலும் கூடுதலாக தலா ஒரு தற்காலிக சோதனைச் சாவடி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் தர்மபுரி மாவட்டத்தில் 9, நாமக்கல்லில் 16, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 21 சோதனைச் சாவடிகள் என மொத்தம் சேலம் சரகத்தில் 57 இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.