ஜெயலலிதாவின் 76 வது பிறந்த தின விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆர் திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் நிர்வாகிகள் சுரேஷ்குப்தா, ரோஜர், எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, நத்தர்ஷா, கட்பீஸ் ரமேஷ், கயிலை கோபி உள்ளிட்டோர் வரவேற்புரை ஆற்றினார்கள். கூட்டத்தில் அமைப்பு செயலாளர் ரத்தினவேல், ஆவின் முன்னாள் சேர்மன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் என்ஜினியர் கார்த்திகேயன், தலைமைக்கழக பேச்சாளர் வீரபெருமாள் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
இந்த கூட்டத்தில் சிறப்புரையாற்றிய கட்சியின் கொள்கை பரப்பு இணை செயலாளர், நடிகை விந்தியா, “எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டிக் காத்து வந்த அ.தி.மு.க.வை இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி கட்டி காப்பாற்றி வருகிறார் என்று சொன்னால் அது மிகையாகாது. அவர் ஒரு நல்ல மனிதர். உண்மையான தமிழன். எளிமையான தலைவர். தமிழ்நாட்டில் கடலைமிட்டாய் போன்று கஞ்சா வாங்க முடிகிறது.
அதிமுக ஆட்சிக்காலத்தில் ஹீரோவாக இருந்த போலீசார் இன்றைக்கு திமுக ஆட்சியில் ஜீரோவாக இருக்கிறார்கள். இதனைத் தட்டிக் கேட்க இந்த அரசு தயங்குகிறது. அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அமல்படுத்தி மேலும் ஏழை, எளிய மக்கள் இளைஞர்கள், பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். ஆனால் திமுக அரசு ஆட்சி கட்டிலில் அமர்ந்த பிறகு ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த திட்டங்களை படிப்படியாக நிறுத்திவிட்டார்.
பிரதமர் மோடி தமிழகத்தில் வருகை தந்து பேசும்பொழுது எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவைப் பற்றி புகழ்ந்து பேசி உள்ளார். அவருக்கு இந்த இரண்டு தலைவர்களின் அருமை தெரிகிறது. ஆனால் இங்கிருக்கும் பாஜக தலைமைக்கு அது தெரியவில்லை. அதிமுகவின் பலத்தை அவர்கள் புரிந்து கொள்ளும் காலம் வரும். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் பொதுமக்கள் திமுகவிற்கு பாடம் புகட்டுவார்கள். திமுகவை இந்த தேர்தல் மூலம் விரட்டி அடிப்பார்கள்” என்று பேசினார். கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.