திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றியதாகவும், அந்தரங்கப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டியதாகவும், கட்டாயக் கருக்கலைப்பு செய்ததாகவும் நடிகை அளித்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, மணிகண்டனை கைது செய்ய காவல்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர். பெங்களூருவில் தலைமறைவாக இருந்த மணிகண்டனை காவல்துறையினர் கடந்த மாதம் 20ஆம் தேதி கைது செய்தனர்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இந்த நிலையில், மணிகண்டனிடம் ரூ. 10 கோடி இழப்பீடு கேட்டு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடிகை சாந்தினி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், ‘திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும்போது பிரச்சினை ஏற்பட்டால் இழப்பீடு கோருவதற்கான நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வழக்கு தொடர்ந்துள்ளேன். என்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றி மோசடி செய்ததால் உடல் அளவில் பாதிக்கப்பட்டுள்ளேன். மன உளைச்சல் காரணமாக மணிகண்டன் எனக்கு ரூ. 10 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும். மேலும் வீட்டு வாடகை, மருத்துவ செலவு உள்ளிட்ட இடைக்கால நிவாரணத் தொகையாக மாதந்தோறும் ரூ. 2 லட்சத்து 80 ஆயிரம் வழங்க உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.
நடிகை சாந்தினி தொடர்ந்த இந்த வழக்கு, அடுத்த மாதம் 5ஆம் தேதி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.