Skip to main content

நடிகை ராணி பத்மினி கொலை வழக்கு; காவலாளி லட்சுமி நரசிம்மனை விடுதலை செய்ய உத்தரவு

Published on 14/12/2017 | Edited on 14/12/2017

நடிகை ராணி பத்மினி கொலை வழக்கு; 
காவலாளி லட்சுமி நரசிம்மனை விடுதலை செய்ய உத்தரவு

பழம்பெரும் நடிகை ராணி பத்மினி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவந்த காவலாளி லட்சுமி நரசிம்மனை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



வில்லியனூர் மாதா, நிரபராதி உள்ளிட்ட பல தமிழ், மலையாளம், தெலுங்கில் ஏராளமான திரைப்படங்களில் நடித்த ராணி பத்மினி, சென்னை அண்ணா நகரில் தாய் இந்திராகுமாரியுடன் வசித்து வந்த நிலையில் 1986ஆம் ஆண்டு இருவரும் கொலை செய்யப்பட்டனர். அவர்களது வீட்டில் வேலை செய்துவந்த கார் ஓட்டுநர் ஜெபராஜ், காவலாளி லட்சுமி நரசிம்மன், சமையல்காரர் கணேசன் ஆகியோர் நகை, பணத்துக்கு ஆசைப்பட்டு கொலை செய்தது தெரியவந்தது. சென்னை திருமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.

இந்த இரட்டைக் கொலை வழக்கை விசாரித்த செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றம், 3 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து 1989ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து 3 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதில், ஓட்டுநர் ஜெபராஜுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தும், மற்ற இருவரையும் விடுவித்தும் உயர் நீதிமன்றம் 1990-ல் உத்தரவிட்டது.

இருவர் விடுவிப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கொலையில் காவலாளி லட்சுமி நரசிம்மனுக்கும் பங்கு இருப்பதால், செங்கல்பட்டு நீதிமன்றம் அவருக்கு தூக்கு தண்டனை விதித்தது சரிதான் என்று கருத்து தெரிவித்து, ஓட்டுநர் ஜெபராஜுக்கு வழங்கியதுபோலவே, தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து 2001-ல் உத்தரவிட்டது. இதையடுத்து, லட்சுமி நரசிம்மன் மீண்டும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

சுமார் 18 ஆண்டுகளாக சிறையில் உள்ள லட்சுமி நரசிம்மன் தன்னை விடுதலை செய்யக் கோரி அரசுக்கு பலமுறை விண்ணப்பித்தும் இதுவரை விடுவிக்கப்படவில்லை. இந்நிலையில், 18 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவரை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி, அவரது மனைவி எஸ்.எல்.மேரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ராஜீவ் சக்தேர்,சதீஸ்குமார் சிறையில் உள்ள லட்சுமி நரசிம்மனை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

- சி.ஜீவா பாரதி

சார்ந்த செய்திகள்