Skip to main content

தலைமறைவாக இருந்த நடிகை மீரா மிதுன் கைது!

Published on 14/08/2021 | Edited on 14/08/2021

 

Actress Meera Mithun arrested

 

பட்டியலின சமூகத்தினரைப் பற்றி சமூக வலைதளங்களில் இழிவாகப் பேசியதாக நடிகை மீரா மிதுன் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையில் கடந்த 7/08/2021 அன்று புகார் அளித்திருந்தார். அந்தப் புகார் மனுவில், "நடிகை மீரா மிதுன் ட்விட்டரில் தாழ்த்தப்பட்ட மக்களை மிகவும் இழிவாகப் பேசி காணொளி பதிவைப் பதிவிட்டுள்ளார்" என தெரிவிக்கப்பட்டது. அத்துடன் அவர் பேசியதாகக் கூறப்படும் வீடியோவும் இணைக்கப்பட்டிருந்தது.

 

அந்தப் புகாரின் அடிப்படையில் நடிகை மீரா மிதுன் மீது கலகத்தைத் தூண்டும் வகையில் பேசுதல், வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினர். மீரா மிதுனை உடனடியாக கைது செய்யக் கோரி சென்னை அம்பத்தூரில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் இளங்கோ தலைமையில் கடந்த 9ஆம் தேதி 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் துணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், கடந்த  11ஆம் தேதி  பட்டியலின மக்களை அவதூறாகப் பேசிய நடிகை மீரா மிதுனுக்கு மத்திய குற்றப்பிரிவு காவல்துறை சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் ஆஜராகாத மீரா மிதுன் "என்னை தாராளமாக கைது செய்யுங்கள். ஏன் காந்திஜி, நேருஜி எல்லாம் ஜெயிலுக்குப் போகவில்லையா. என்னை கைது செய்ய முடியாது. அது கனவில் வேண்டுமானால் நடக்கலாம்'' என்று பேசி வீடியோ வெளியிட்டிருந்தார்.

 

இந்நிலையில், அவரை கைது செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில், அவர் கேரளாவில் அவரது உறவினர்கள் வீட்டில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவரின் செல்ஃபோன் சிக்னலை வைத்து அவர் இருக்கும் இடத்தைக் கண்டறிந்த போலீசார், மீரா மிதுனை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அவர் சென்னை அழைத்துவரப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்