மனிதர்கள் பலவிதம்... முன்னாள் அமைச்சர் மணிகண்டனும் நடிகை சாந்தினியும் ஒருவிதம். குறிப்பாக தேவைக்கு அதிகமாக பணம் வைத்திருப்பவர்களில் பலருக்கும் பெண் சபலம் தானாகவே வந்துவிடுகிறது. 'பணத்தை விட்டெறிந்தால், இதற்கென்றே உள்ள அழகிகளை அனுபவிக்கலாம்' என்ற எண்ணம் மேலோங்கிவிடுகிறது. இதற்குத்தான் புரோக்கர்கள் இருக்கிறார்களே.. பிறகென்ன? அவரவர் இஷ்டத்துக்கு வாழ்ந்துவிட முடியும். இங்கேதான் மனிதப் படைப்பு ஒரு செக் வைத்துவிடுகிறது. என்னதான் கட்டுப்பாட்டுடன் இருந்தாலும், தொடர்ந்து ஒரு பெண்ணிடம் பழகும்போது, கரு உருவாவது, அதைக் கலைக்கச் சொல்லி வற்புறுத்துவது உள்பட பிற பிரச்சினைகள் அவர்களுக்குள் வந்துவிடுகிறது.
டாக்டர் மணிகண்டன் விஷயத்திலும் அதுதான் நடந்திருக்கிறது. ஒருநாள் பழக்கம் என்றில்லாமல், தனிவீடு பிடித்து தொடர்ந்து பழகியிருக்கிறார். அவர் அமைச்சராக வேறு இருந்திருக்கிறார் அல்லவா? இதற்கெல்லாம் சாட்சிகளாக போலீஸ்காரர், பாதுகாவலர், உதவியாளர், பணிப்பெண்கள், கருவைக் கலைத்த டாக்டர்கள் என வரிசை கட்டி நிற்கிறார்கள். போலீஸ் விசாரணையில் ஒப்புதல் வாக்குமூலமும் அளித்திருக்கிறார்கள்.
“நடிகை சாந்தினி கூறும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை. புலன் விசாரணைக்கு என்னை உட்படுத்திக்கொள்ளத் தயாராக இருக்கிறேன்” என்று என்னதான் வாதம் வைத்தாலும், மணிகண்டனுக்கு முன்ஜாமீன் கிடைத்தபாடில்லை. முன்ஜாமீன் அளித்தால் சாட்சிகளைக் கலைத்துவிடுவார் என்று காவல்துறை தரப்பில் உறுதியாகச் சொல்கிறார்கள். பதிலுக்கு மணிகண்டன் தரப்பில், “அப்போதே மணிகண்டனுடைய அமைச்சர் பதவி போய்விட்டது. சாட்சிகள் யாரும் மணிகண்டனிடம் வேலை பார்ப்பவர்கள் அல்ல. அரசு ஊழியர்கள்” எனச் சொன்னாலும், கைது செய்யக்கூடாது என்று பிறப்பித்திருந்த இடைக்கால உத்தரவை நீட்டிக்க நீதிமன்றம் ஏற்கவில்லை.
இதுவும் சட்ட மீறலான தவறுதான் என்றாலும், பணத்தை மட்டும் பயன்படுத்தாமல், திருமணம் செய்துகொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறி நம்பவைத்தும் உறவை நீட்டித்தபடியே இருந்ததுதான் சட்டத்தின் பிடியில் மணிகண்டனை வசமாகச் சிக்க வைத்திருக்கிறது.