Skip to main content

நடிகர் சங்கத் தேர்தலில் பாண்டவர் அணி வெற்றி!

Published on 20/03/2022 | Edited on 20/03/2022

 

actors association election pandavar team again wins

 

கடந்த 2019- ஆம் ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (20/03/2022) காலை சென்னையில் உள்ள குட் ஷெப்பர்ட் என்ற தனியார் பள்ளியில் ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் முன்னிலையில் தொடங்கியது. இத்தேர்தலில் நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், நடிகரும், இயக்குநருமான கே.பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிட்டன.

 

தலைவர் பதவிக்கு நடிகர் நாசரும், பொதுச் செயலாளர் பதவிக்கு நடிகர் விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்திக்கும் போட்டியிட்டிருந்தனர். அதேபோல் எதிரணியில் தலைவர் பதவிக்கு பாக்யராஜும், பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேசும், பொருளாளர் பதவிக்கு நடிகர் பிரசாந்தும் போட்டியிட்டிருந்தனர். 

 

இந்த நிலையில், பதிவான வாக்குகள் எண்ணும் பணி நிறைவடைந்த நிலையில், முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, நடிகர் சங்கத் தேர்தலில் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகளை பாண்டவர் அணி கைப்பற்றியது. தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நடிகர் நாசர் வெற்றிப் பெற்றுள்ளார். நாசர் 1,701 வாக்குகளும், எதிர்த்து போட்டியிட்ட பாக்யராஜ் 1,054 வாக்குகளும் பெற்றனர். பாண்டவர் அணி சார்பில் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கருணாஸ் மற்றும் பூச்சி முருகன் வெற்றி பெற்றனர். பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட நடிகர் விஷாலும், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட நடிகர் கார்த்தியும் வெற்றி பெற்றனர். 

 

நடிகர் சங்கத் தேர்தலில் முக்கியப் பதவிகளில் ஒன்றில் கூட சுவாமி சங்கரதாஸ் அணி வெற்றி பெறவில்லை. சுவாமி சங்கரதாஸ் அணியில் போட்டியிட்ட பாக்யராஜ், ஐசரி கணேஷ், பிரஷாந்த், குட்டி பதமினி, உதயா உள்ளிட்டோர் தோல்வி அடைந்தனர். 

 

சார்ந்த செய்திகள்