நீட் தேர்வுக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்த நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தேவையில்லை எனத் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
நீட் தற்கொலை குறித்து நடிகர் சூர்யா தெரிவித்த கருத்து, நீதிபதிகளையும், நீதிமன்றத்தையும் அவமதிக்கும் வகையில் உள்ளது எனக்கூறி சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கடிதம் எழுதினார்.
இதையடுத்து நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஆறு பேர் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினார்கள். இதுதொடர்பாக, நடிகர் சூர்யா மீது உயர் நீதிமன்றமே தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரலாமா என அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணிடம் கருத்துக் கேட்டது. ஆனால் நடிகர் சூர்யா மீது, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை வழக்குத் தொடர தேவையில்லை எனத் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் தலைமை நீதிபதிக்கு அறிக்கை சமர்ப்பித்தார்.
தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவு பிறப்பித்ததில், "நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் எழவில்லை என அரசின் தலைமை வழக்கறிஞர் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். அதை ஏற்றுக் கொள்கிறோம். எனவே நீட் தேர்வு தொடர்பாகக் கருத்துத் தெரிவித்துள்ள நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது" என்றார்.
இந்நிலையில், திருச்சியில் காய்கறி வியாபாரம் செய்துவரும் விக்னேஷ் 'மனித கடவுள் சூர்யா' ரசிகர்கள் நற்பணி மன்றத்தைத் துவக்கி, திருச்சி மாநகரம் முழுவதும் 6 பிட் போஸ்டர் ஒட்டியுள்ளார். இதுகுறித்து மனித கடவுள் சூர்யா ரசிகர்கள் நற்பணி மன்ற நிறுவனர் விக்னேஷிடம் பேசுகையில், 'ஆதவன்' படம் பார்த்ததிலிருந்து நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகரானேன்.
சூர்யா ரசிகர் நற்பணி இயக்கம் திருச்சியில் செயல்பட்டு வருகிறது. நீட் தேர்வு குறித்து நடிகர் சூர்யா பேசியது எனக்கு மிக முக்கியமாக தோன்றியது. அதனால், திருச்சி மாவட்டத்தில் மனித கடவுள் சூர்யா ரசிகர் நற்பணி மன்றத்தைத் துவக்கி 7 ஆயிரம் ரூபாய் செலவில் திருச்சி மாநகரம் முழுவதும் ஆறு பிட் போஸ்டர் ஒட்டினேன். இதுகுறித்து மாநில நிர்வாகிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளேன்.
ஏழை எளிய மாணவர்களுக்குக் கல்வி அளித்துவரும், 'அகரம்' ஃபவுண்டேஷன் பணியானது இளைய தலைமுறையினர் வாழ்க்கையில் ஒளியேற்றும் வகையில் உள்ளது. 13 வருடம் தீவிர ரசிகராக இருந்த நான் மனித கடவுள் சூர்யா ரசிகர்கள் நற்பணிமன்றம் துவக்கி செயல்பட்டு வருகிறேன். மாநில நிர்வாகிகள் ஒப்புதலுக்காக தகவல் அனுப்பியுள்ளேன் என்றார்.
மனித கடவுள் சூர்யா ரசிகர்கள் நற்பணி மன்ற போஸ்டரில் வாய்மையே வெல்லும் என அச்சிட்டு நடிகர் சூர்யா சட்டை காலரை தூக்கிப் பிடிக்கும் படம் இடம் பெற்றுள்ளது. அறம் வழி நடக்கும் புது சரித்திரமே, உங்கள் வழியில் ஒன்றிணைவோம். மாணவர்களோடு துணை நிற்போம் என அச்சிட்டு 29 ரசிகர்கள் பெயரும் 9 மாநில நிர்வாகிகள் படமும் போஸ்டரில் இடம் பெற்றுள்ளது.
போஸ்டரின் பின்புலத்தில் கொடிகளுடன் ஆர்ப்பரிக்கும் கூட்டத்துடன் இளைஞர் ஒருவர் 'BANNED NEET EXAM' பதாகையைத் தூக்கிப்பிடித்தது போல், படமொன்று இடம் பெற்றுள்ளது. திரைப்பட நடிகராக பார்க்கப்பட்ட சூர்யா தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் மனித கடவுளாகப் பார்க்கப்பட்டு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது திருச்சி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.