தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடைபெற்ற நிலையில், மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேட்டிலும் திருச்சி பெரிய சூரியூரிலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தற்போது துவங்கியுள்ளது. விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து ஜல்லிக்கட்டுப் போட்டியினை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி மற்றும் நடிகர் சூரி ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஜல்லிக்கட்டு போட்டி துவங்குவதற்கு முன்பே அனைத்து மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. போட்டியில் அனைத்து மாடுபிடி வீரர்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து முனியாண்டி கோவில், அரியமலை கோவில், வலசை அம்மன் கோவில் காளைகள் ஆகியவை அவிழ்த்துவிடப்பட்டன.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 1000 காளைகள் மற்றும் 350 மாடுபிடி வீரர்கள் களமிறக்கப்பட உள்ளனர். சிறந்த மாடுபிடி வீரருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் சிறந்த மாடுபிடி வீரருக்கு கார் பரிசாக வழங்கப்படுகிறது.