நடிகர் ராமராஜன் கிருத்துவ மதத்திற்கு மாறிவிட்டார் என்று தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது ஒரு வீடியோ. அந்த வீடியோ கிட்டதட்ட 10 மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. அதில் ராமராஜன் என்பதற்கு பதில் நாமராஜன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வீடியோ காட்சியில் இயேசுவின் சமாதானம் என்ற நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, என்னடா கரக்காட்டக்காரன்ல மாங்குயிலே பூங்குயிலேன்னு பாடிக்கிட்டு இருந்தவன், கோயம்பத்தூரில் வந்து இயேசுன்னு பேசுறான்னு நினைப்பீங்க. வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை சொல்வது பெரிய பாக்கியம். எனக்கு சொந்த ஊர் மதுரை மாவட்டம் மேலூர். அங்கே பிறந்து வளர்ந்து திரையரங்கில் வேலை பார்த்து மெட்ராஸ் வந்து எல்லோருக்கும் தெரியும் விதமாக நடிகராக ஆனேன். அரசியலில் ஈடுபட்டு எம்பி ஆகி நல்லா வந்துகிட்டு இருந்த நேரத்தில் சோதனை வந்தது. எல்லோருக்கும் சோதனை வரும். அப்படித்தான். 2010ல் ஒரு இடத்திற்கு காரில் போய்க்கொண்டிருந்தபோது மிகப்பெரிய கார் விபத்து. அந்த விபத்தில் எனது நண்பர் ஸ்பாட்டிலேயே இறந்துவிட்டார். என்னை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். கிட்டதட்ட 15 நாள் சுயநினைவு இல்லாமல் இருந்தேன். இவர் பிழைப்பாரா பேசுவாரா, பழைய நினைவு வருமா என்று என்று எல்லோரும் பேசியது எனக்கு பிறகுதான் தெரியும்.
அப்போது எனது நண்பர் பால் தங்கராஜ் இயேசுவை வழிபடக்கூடியவர். அவர் என்னை ஆஸ்பத்திரியில் பார்த்துக்கொண்டார். நான் என்னவே புலம்பிக்கொண்டிருந்தேன். அப்ப அவர் சொன்னார், தைரியமாக இருங்க. உங்களுக்கு ஒண்ணும் ஆகாது. நான் ஒரு பாஸ்டரை கூட்டிட்டு வரேன்னு சொல்லி, அப்புறம் ஒரு பாஸ்டர் என் தலையில் கை வைத்து ஜபம் பண்ணும்போது எனக்கு இயேசுவே என் தலையில் கையை வைத்து பார்த்த மாதிரி தோன்றியது. இன்றைக்கு நான் நல்லா இருக்கேன். எல்லா இடத்திற்கும் போறேன் என்றால் அது இயேசுவின் கருணைதான். மனசார நினைத்து இயேசுவே என்று சொன்னால் குணமாகும் என்பதை நன்றாக புரிந்து கொண்டேன். எந்த பிரச்சனையானாலும் நம்முடன் இருப்பவர் கர்த்தர் என்றார்.