Skip to main content

''ரஜினிகாந்த் நலமாக உள்ளார்''- லதா ரஜினிகாந்த் தகவல்

Published on 28/10/2021 | Edited on 28/10/2021

 

Actor Rajinikanth admitted to hospital

 

 

நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

 

கடந்த 25 ஆம் தேதி டெல்லியில் தாதா சாகேப் பால்கே விருது ரஜினிகாந்திற்கு வழங்கப்பட்டது. இதற்காக டெல்லி பயணம், விழாவில் பங்கேற்றது, பின்னர் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றது, தொடர்ந்து நண்பர்கள் சந்திப்பு, வாழ்த்து பெற்றது என இருந்தார். டெல்லி பயணம், தலைவர்கள், நண்பர்கள் சந்திப்பு என இருந்தநிலையில் சென்னை திரும்பினார். 

 

rajini

 

இந்தநிலையில் வியாழக்கிழமை காவேரி மருத்துவமனையில் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. இது குறித்து விளக்கமளித்துள்ள ரஜினிகாந்த்தின் மனைவி லதா ரஜினிகாந்த், ''ரஜினிக்கு ஒவ்வொரு ஆண்டும் முழு உடல் பரிசோதனை செய்யப்படுவது வழக்கம். அதேபோல் இந்த வருடத்திற்கான முழு உடல் பரிசோதனைக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நலமுடன் இருக்கிறார்'' என்று தெரிவித்துள்ளார்.

 

தொடர்ந்து பயணம், விழாக்களில் பங்கேற்பு, தலைவர்கள், நண்பர்கள் சந்திப்பு என இருந்ததால் இரவு ஓய்வு எடுத்துவிட்டு நாளை காலை ரஜினிகாந்த்  வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜனநாயக கடமையாற்றினார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Actor Rajinikanth cast his vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  அதன்படி நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

Next Story

மன்சூர் அலிகானுக்கு தீவிர சிகிச்சை

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்தது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தினர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கிய நிலையில் இன்று மாலை 6 மணியோடு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறந்த பிரச்சாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்தத் தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார் மன்சூர் அலிகான். பலாப்பழ சின்னத்தில் போட்டியிடும் அவர், தொடர்ச்சியாகக் காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட் என வேலூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் அவரது வழக்கமான நக்கல் கலந்த பாணியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதையடுத்து பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று வேலூர் குடியாத்தம் பகுதியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்ட மன்சூர் அலி கானுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை கே.கே.நகரில் உள்ள மருத்துவமனையில் தற்போது மன்சூர் அலிகான் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.