தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 - 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று (20.03.2023) தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து துறை வாரியான அறிவிப்புகளை வெளியிட்டார்.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதியானது செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இத்திட்டம் குறித்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை வழங்குவது தொடர்பாக கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில், "இல்லத்தரசிகளுக்கு ஊதியம் எனும் கனவை முன்னெடுத்த முதல் இந்திய கட்சி மக்கள் நீதி மய்யம். புரட்சிகரமான இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளின் உரிமைத் தொகையாக உருவெடுத்திருப்பதில் மகிழ்கிறேன். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த அறிவிப்பிற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களைப் பாராட்டுகிறேன். இல்லத்தரசிகளைப் போற்றுவதில் தமிழ்நாடு இந்தியாவிற்கு வழி காட்டுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.