Skip to main content

“மாணவர்களை பள்ளிக்குச் செல்ல விடாமல்...” எச்சரித்த ஆட்சியர்!

Published on 23/03/2022 | Edited on 23/03/2022

 

"Action will be taken if school students are involved in this" - Collector warns

 

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் நாள் கூட்டம் வாரம்தோறும் திங்கட்கிழமைகளில் நடப்பது வழக்கம். கரோனா பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக நடைபெறவில்லை. அதற்கு பதிலாக மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயலில் பெட்டி வைக்கப்பட்டு, பொதுமக்கள் அதில் தங்களுடைய மனுக்களை போட்டு விட்டு செல்லும் நடைமுறை இருந்து வந்தது. இந்நிலையில், இன்று முதல் நேரடியாக மனுக்கள் வாங்கப்படும் என ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை அடுத்து இன்று மாவட்டத்தின் பல இடங்களில் இருந்து வந்த பொதுமக்கள் தங்கள் புகார் மனுக்களை அளித்துச் சென்றனர்.

 

கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்த மருதூர் பஞ்சாயத்தில் விஸ்வநாதபுரம் எனும் கிராமம் உள்ளது. சுமார் 200 ஆண்டு காலமாக அங்கு வசிக்கும் அந்த கிராம மக்களுக்கு சாலை வசதி, தெரு விளக்கு வசதி இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் பல முறை, பல ஆண்டுகளாக மனு அளிக்கப்பட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவர்களை அழைத்துக் கொண்டு அப்பகுதி இளைஞர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க வருகை தந்தனர். அப்போது, அவர்கள் கையில் வைத்திருந்த பேனரை எடுத்துக் கொண்டு ஆட்சியர் அலுவலகத்திற்குள் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. இதனை தொடர்ந்து பேனர்களை சுருட்டி எடுத்துக் கொண்டு மாவட்ட ஆட்சியரை சந்திக்க சென்றனர். அங்கு பணியில் இருந்த அதிகாரிகளிடம் பள்ளிக் குழந்தைகள் ஆட்சியரை சந்திக்க அனுமதி கேட்டனர். பள்ளி குழந்தைகள் அனுமதிக்க வேண்டாம் என கூறியதை அடுத்து அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். 

 

"Action will be taken if school students are involved in this" - Collector warns

 

பின்பு, அவர்களுடன் வந்த கல்லூரி மாணவி மற்றும் ஒருவரும் ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். அப்போது மனுவினை பெற்றுக் கொண்ட ஆட்சியர் பிரபு சங்கர், “எந்தப் பிரச்சனைகளாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம். பள்ளிக்குச் செல்லும் மாணவர்களை பள்ளிக்குச் செல்ல விடாமல் இங்கு அழைத்து வரக் கூடாது. இது போன்று நடந்து கொண்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார். மேலும், கல்லூரி மாணவி உணர்ச்சி வசப்பட்டு பேசியதால் கூட்டரங்கை விட்டு வெளியேறும்படி கூறினார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

கூட்டரங்கை விட்டு வெளியேறிய அவர்கள் செய்தியாளர்களிடம் பேசிய மாணவி, அடிப்படை வசதிகள் இல்லாமல் மிகவும் சிரமப்படுவதாகவும், பள்ளிகளுக்கு செல்ல முடியாத நிலை இருப்பதனால்தான் பள்ளிக் குழந்தைகள் தானாக இங்கு வந்தனர் என்றும் தெரிவித்தார். மேலும், சாலை வசதி செய்து தரும் வரை பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் நாங்கள் செல்லப் போவதில்லை எனவும் மாணவ மாணவிகள் தெரிவித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்