Skip to main content

கோவில் நிலத்தில் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் கட்ட எதிர்ப்பு!- தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 16/12/2020 | Edited on 16/12/2020

 

temple land district collector office chennai high court tn govt

 

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு, வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் நிலத்தை நீண்ட காலத்துக்கு குத்தகைக்கு விட எதிர்ப்பு தெரிவித்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கும், அறநிலையத் துறைக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க, வீரசோழபுரம் எனும் இடத்தில் அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான 45 ஏக்கர் நிலத்தை அரசுக்கு ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஆட்சியர் அலுவலகம் அமைக்கும் பணிகளை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது.

 

இந்நிலையில், கோவில் நிலத்தை நீண்டகாலத்துக்கு குத்தகைக்கு விடுவது தொடர்பாக கடந்த நவம்பர் 28- ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 

இந்த வழக்கு, நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, முறையான சட்ட விதிகளைப் பின்பற்றாமல் குத்தகைக்கு வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், எத்தனை ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கப்படுகிறது என்ற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை எனவும் மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

 

அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், ‘நிலம் குத்தகைக்கு வழங்கப்படும்போது, சட்ட நடைமுறை முழுமையாகப் பின்பற்றப்படும். பயன்பாட்டில் இல்லாத அந்த நிலத்தின் மூலம் மாத வாடகையாகக் கோவிலுக்கு வருமானம் கிடைக்கும். இந்த மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும்.’ எனக் கோரிக்கை விடுத்தார்.

 

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புகைப்படங்களைப் பார்க்கும்போது, கோவில் சிதிலமடைந்துள்ளது தெரிகிறது. அதைச் சரி செய்யாதது ஏன்? எத்தனை ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கப்படுகிறது எனக் குறிப்பிடாதது ஏன்?’ என அரசுத்தரப்பிடம் கேள்விகள் எழுப்பினர்.

 

பின்னர், மனுவுக்கு ஜனவரி 22- ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கும், அறநிலையத் துறைக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், ஆட்சியர் அலுவலகக் கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைக்கவும் உத்தரவிட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்