தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், “தமிழகத்தில் கரூர் மாவட்டத்தில்தான் அதிகபட்சமாக 34 செயற்கை மணல் உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டுவருகின்றன. இதில் 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பொதுப்பணித்துறையிடமிருந்து அனுமதி பெறாமல் இயங்கிவருகின்றன.
மேலும், முறைகேடாக அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி கற்களை வெட்டி எடுத்து செயற்கை மணல் உற்பத்தி செய்துவருகின்றன. இதனால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் அதிக பாரம் ஏற்றிக்கொண்டு, லாரி உரிமையாளர்கள் அதிக லாபத்தைப் பெற்றுக்கொண்டு, குறைந்த பணத்தில் வரி செலுத்துகிறார்கள்.
மணலை, லாரிகளில் அளவுக்கு அதிகமாக ஏற்றிவிட்டு, அதற்கான இன்வாய்ஸ் வரும்போது குறைவாக இன்வாய்ஸ் பெறுவது போன்ற பல்வேறு சம்பவங்கள் அரசுக்குத் தொடர்ந்து இழப்பை ஏற்படுத்திவருவதால் செயற்கை மணல் குவாரி உரிமையாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து மேற்படி குவாரிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும்’ என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், திருச்சி மற்றும் கரூர் மாவட்டங்களில் அளவுக்கு மீறி கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான மூலப்பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகளைக் கடுமையான சோதனைக்கு உட்படுத்தி அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கின்றனர்.