ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வந்தநிலையில், இன்று காலை உக்ரைனை தாக்க ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டார். அதனைதொடர்ந்து ரஷ்ய படைகள், உக்ரைனின் நகரங்கள் மீது கடும் தாக்குதலை நிகழ்த்தி வருகிறது. ஏவுகணைகளை ஏவியும், போர் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசியும் ரஷ்ய ராணுவம் தாக்குதலில் ஈடுப்பட்டு வருகிறது. ரஷ்யாவின் தரைப்படையும் உக்ரைனுக்குள் நுழைந்து வருகிறது. இந்நிலையில் உக்ரைனில் ஏராளமான இந்திய மாணவர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை பாதுகாப்பாக மீட்க அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. அதேசமயம், விரைந்து நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடின் பல்வேறு அரசியல் தலைவர்களும் வலியுறுத்திவருகின்றனர்.
இந்நிலையில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், அங்குள்ள தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய மாணவர்கள் பல இடங்களில் சிக்கித் தவிக்கின்றனர். ரஷ்ய விமானங்கள் தொடர்ந்து குண்டு மழை பெய்து வரும் நிலையில், இந்திய மாணவர்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லாமல் ரயில் நிலையங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
உக்ரைனில் போர் தொடங்குவதற்கு முன்பே அங்குள்ள இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்து வந்திருக்க வேண்டும். ஆனால், மீட்பு நடவடிக்கை ஒரு சில நாட்களுக்கு முன் தான் தொடங்கியதால் சில நூறு இந்தியர்களை மட்டுமே மீட்க முடிந்தது. உக்ரைனில் தவிக்கும் இந்தியர்களுக்கு அங்குள்ள இந்திய தூதரகத்திலிருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை.
உக்ரைனில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். அவர்களுக்கு தேவையான உதவிகள் தூதரகம் மூலமாக வழங்கப்பட வேண்டும். மாற்று வழிகளை ஆராய்ந்து உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை விரைந்து மீட்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.