சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில், இன்று (16/11/2021) நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழில்துறை சார்பில், தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தின் உயர்தர ரக சிமெண்ட் 'வலிமை’யை அறிமுகப்படுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விற்பனையைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன் இ.ஆ.ப., தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தின் நிர்வாக இயக்குநர் அனில் மேஷ்ராம் இ.ஆ.ப. மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, "வலிமை சிமெண்ட் அதிக உறுதி தன்மையைக் கொண்டது. வலிமை சிமெண்ட் விரைவில் உலரும் தன்மை கொண்டது. இந்த சிமெண்ட் வெப்பத்தைத் தாங்கக் கூடியது. ஒரு மூட்டை 'வலிமை PPC' சிமெண்ட்டின் விலை ரூபாய் 350 ஆகவும், ஒரு மூட்டை 'வலிமை OPC' சிமெண்ட்டின் விலை ரூபாய் 365 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்த விலையில் தரமான சிமெண்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களிடையே 'வலிமை' சிமெண்டைக் கொண்டு சேர்க்க விளம்பரம் செய்யப்பட உள்ளது. அனைத்து இடங்களிலும் 'வலிமை' சிமெண்ட் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக 30,000 மெட்ரிக் டன் சிமெண்ட் உற்பத்தி செய்யப்படுகிறது. அரசுத் திட்டங்களுக்காகவும் 'வலிமை' சிமெண்ட் பயன்படுத்தப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.