Skip to main content

“சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது”-தமிழக அரசு!

Published on 08/07/2021 | Edited on 08/07/2021
"Action is being taken to recover the idols" - Tamil Nadu government

 

தமிழக கோவில்களில் இருந்து கடத்தப்பட்ட சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் சொத்துக்கள், நகைகள் குறித்த விவரங்கள் அடங்கிய பதிவேடு காணாமல் போயுள்ளதாகவும், கோவில் சிலைகள், நகைகள் காணாமல் போயுள்ளதாகவும், பந்தநல்லூர் காவல் நிலையத்தில் பதிவான சிலைக்கடத்தல் வழக்கு தொடர்பான  ஆவணங்கள் மாயமாகியுள்ளதாகவும் கூறி வெங்கட்ராமன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், பந்தநல்லூர் காவல் நிலையத்தில் பதிவான சிலைக்கடத்தல் தொடர்பான வழக்கு ஆவணங்கள் மாயமாகவில்லை எனவும், அவை புலன் விசாரணை அதிகாரி வசம் உள்ளதாகவும் தெரிவித்தார். கடத்தப்பட்ட சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். மனுதாரர் வெங்கட்ராமன், தலைமை வழக்கறிஞர் தவறான தகவல்களை தெரிவிப்பதாகவும், உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் பணி ஓய்வு பெற்ற பின், ஏழு புகார்கள் அளித்தும் அதன் மீது எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை எனவும் புகார் தெரிவித்தார்.

 

இதையடுத்து, சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு அமர்வு கலைக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இந்த அனைத்து வழக்குகளையும் குறிப்பிட்ட அமர்வு முன் விசாரணைக்கு பட்டியலிட ஏற்பாடு செய்வதாக குறிப்பிட்டனர். பின்னர், இந்த வழக்கில் தமிழக அரசின் பதில் மனுவுக்கு பதிலளிக்க மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

 

 


 

சார்ந்த செய்திகள்