மேட்டூர் அருகே, 38 லட்சம் ரூபாய் அசல் கடனுக்கு வட்டி, வட்டிக்கு வட்டி எல்லாம் சேர்த்து 1.40 கோடி ரூபாய் வட்டி செலுத்த வேண்டும் என தாபா உணவக உரிமையாளரை மிரட்டியதாக நிதி நிறுவன அதிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள கருமலைக்கூடல் நேரு நகரைச் சேர்ந்தவர் சதீஸ் (வயது 43). சாம்பள்ளியில் தாபா உணவகம் நடத்தி வருகிறார். இவர், கடந்த 2017- ஆம் ஆண்டு ஜனவரி மாதம், அதே பகுதியைச் சேர்ந்த நிதி நிறுவன அதிபர் ஜெயக்குமார் என்பவரிடம், தொழில் விரிவாக்கத்திற்காக 5 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.
அதற்கு குறிப்பிட்ட சதவீதம் மாதம்தோறும் வட்டி செலுத்தி வந்துள்ளார். 2019- ஆம் ஆண்டு சதீஸ், முன்பு கடன் பெற்ற அவரிடமே மேலும் 33 லட்சம் ரூபாய் வட்டிக்கு கடன் பெற்றார். இதற்காக 100- க்கு 5 ரூபாய் வட்டி என்று ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர்.
சதீஸ் பெற்ற கடனுக்கு இதுவரை 50 லட்சம் ரூபாய் வரை வட்டியாக மட்டுமே செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஓராண்டாக வியாபாரத்தில் நட்டம் ஏற்பட்டதாகவும், அதனால் வட்டித் தொகை செலுத்த முடியவில்லை என்றும் சதீஸ் கூறியுள்ளார்.
இதையடுத்து அவரிடம் கடனுக்கான வட்டியையும், வட்டி செலுத்தாத காலத்திற்கு அபராத வட்டியும் கணக்கிட்டு மேலும் 90 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று நிதி நிறுவன அதிபர் ஜெயக்குமார் கேட்டுள்ளார். தன்னால் இப்போதைக்கு அவ்வளவு பெரிய தொகை கொடுக்க முடியாது என சதீஸ் கூறியுள்ளார். அதற்கு ஜெயக்குமார் ஆள்களை வைத்து மிரட்டியதாகச் சொல்லப்படுகிறது.
இதையடுத்து தாபா உரிமையாளர் சதீஸ், தன்னிடம் ஜெயக்குமார் கந்துவட்டி கேட்டு மிரட்டுவதாக கருமலைக்கூடல் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையறிந்த ஜெயக்குமார், திடீரென்று தலைமறைவாகிவிட்டார்.
விசாரணையில், சதீஸ், இரண்டு தவணையாக பெற்ற 38 லட்சம் ரூபாய் அசல் கடனுக்கு 50 லட்சம் ரூபாய் வட்டி செலுத்தியுள்ள நிலையில், அவரிடம் மேலும் 90 லட்சம் ரூபாய் வட்டி கேட்டு மிரட்டியிருப்பது தெரிய வந்துள்ளது.
கந்துவட்டி தடை சட்டத்தின் கீழ் ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் அவரை தேடி வருகின்றனர்.