நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (04-06-24) எண்ணப்பட்டு வரும் நிலையில், முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில், மதியம் 3 மணி நிலவரப்படி பா.ஜ.க கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும், மற்ற கட்சிகள் 17 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.
இந்த தேர்தலில் திரைப் பிரபலங்களும் போட்டியிட்ட நிலையில் அதில் வெற்றி பெற்றவர்களின் விவரம் பின்வருமாறு. பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக பா.ஜ.க.வுக்கும் மோடிக்கும் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த இவர் முதல் முறையாக ஹிமாச்சல பிரதேஷ் மண்டி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் களம் கண்டார். இப்போது காங்கிரஸ் வேட்பாளர் விக்கிரமாதித்ய சிங்கை விட 75 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.
இதனிடையே மோலிவுட் நடிகர் சுரேஷ் கோபி, இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். பின்பு அதே ஆண்டில் பாஜகவில் இணைந்து தற்போது பா.ஜ.க. சார்பில் கேரளா திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுனில் குமாரை விட 73 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் கேரளாவில் முதல் முறையாக நாடாளுமன்ற வேட்பாளரை பா.ஜ.க. வென்றுள்ளது.
பாலிவுட் நடிகை ஹேமாமாலினி, 2003ஆம் ஆண்டு ராஜ்யசபா உறுப்பினராக இணைந்தார். பின்பு 2004-ஆம் ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்தார். பின்பு 2011ஆம் ஆண்டு மீண்டும் ராஜ்யசபா உறுப்பினராக சென்றார். அடுத்து 2014 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் உத்தரப் பிரதேச மதுரா தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து 2024 தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டார். இதில் காங்கிரஸ் வேட்பாளர் முகேஷ் தங்கரரை விட 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
இதனிடையே நடிகை ராதிகா சரத்குமார், முதல் முறையாக மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டார். அனால் இதில் பின்னடவை சந்தித்து வருகிறார். இதற்கிடையே காங்கிரஸ் எம்.பியாக இருந்த நடிகர் விஜய் வசந்த், மீண்டும் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டார். இவர், பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனை விட 1 லட்சத்திற்கும் அதிக வாக்குகள் பெற்று முன்னைலையில் உள்ளார். நடிகர் மன்சூர் அலிகான், இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வந்த நிலையில், வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். பின்பு காங்கிரஸில் இணைந்தார். இந்தச் சூழலில் வேலூர் தொகுதியில் 1000க்கும் குறைவான வாக்குகளைப் பெற்று பின்னடைவில் உள்ளார்.
நடிகை மற்றும் அமைச்சராக இருந்த ரோஜா, ஆந்திராவில் மக்களைவைத் தேர்தலின் இடையே சட்டமன்ற தேர்தலும் நடக்கும் நிலையில் அதில் நகரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டார். இப்போது அங்கு 25 ஆயிரம் வாக்குகள் பின் தங்கி தோல்வியை நோக்கி சென்றுள்ளார்.