அரியலூர் மாவட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட சிமெண்ட் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளுக்குச் சுண்ணாம்புக்கல் மற்றும் இடுபொருட்கள் ஏற்றி வரும் கனரக லாரிகள், சிமெண்ட் ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் சிமெண்ட் மூட்டைகளை வெளியூர்களுக்கு ஏற்றிச் செல்லும் கனரக லாரிகள் என ஆயிரக்கணக்கில் மாவட்டம் முழுவதும் சுற்றி வருகின்றன. இந்த லாரிகளால் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. அந்தவகையில் சிமெண்ட் லாரி ஒன்று, காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரது உயிரைப் பறித்துள்ளது.
அரியலூர் மாவட்டம், திருமானூர் காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணி செய்து வந்தவர் பாலசுப்பிரமணியம். இவர், இரவு ரோந்து பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது திருமானூர் - கீழப்பழுவூர் சாலையில் தனியார் சர்க்கரை ஆலைக்கு அருகில் இரவு 8 மணி அளவில் லாரி இவரது இருசக்கர வாகனத்தில் மோதியதில் சம்பவ இடத்திலேயே லாரி சக்கரத்தில் சிக்கி கொடூரமான முறையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும் கல்லூரி படித்து வரும் மகளும், மகனும் உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கீழப்பழுவூர் போலீசார், அவரது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். சம்பவ இடத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.