சென்னை டூ பெங்களுரூ தேசிய நாற்கர சாலையில் தினம் தினம் விபத்து நடப்பது வழக்கமாகிவிட்டது. தமிழகத்தில் இந்த சாலையில் நடைபெறும் விபத்துக்கள் தான் அதிகம் என்கிறது ஒரு புள்ளிவிபரம். தற்போது சாலை பாதுகாப்பு வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. தலைகவசம் அணிந்துக்கொண்டு இருசக்கர வாகனங்களை இயக்கவேண்டும், சாலை பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என காவல்துறை மற்றும் போக்குவரத்துதுறை அதிகாரிகள் மாணவர்களை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த விழிப்புணர்வை பெரும்பான்மையானவர்கள் ஏற்று கடைப்பிடித்து நடப்பதில்லை என்பதே பெரும் குற்றச்சாட்டாக உள்ளது. வேகமாக சென்ற மூவர் மீது வாகனம் மோதி பலியாகியுள்ளார்கள்.
திருப்பத்தூர் மாவட்டம், சென்னை டூ பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த சின்னபள்ளிகுப்பம் பகுதியை சேர்ந்த 25 வயதான வேலு, வடச்சேரி பகுதியை சேர்ந்த 24 வயதான தமிழ் சுந்தர் மற்றும் 24 வயதான சந்தோஷ் மூவரும் ஒரே வாகனத்தில் ஜனவரி 23ந்தேதி மாலை சென்றுக்கொண்டு இருந்துள்ளனர்.
அப்போது இவர்கள் பின்னால் வந்த வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு வேகமாக சென்றுள்ளது. இதில் வேலு, தமிழ்சுந்தர் இருவரும் சம்பவயிடத்திலேயே பலியாகியுள்ளார்கள். சந்தோஷ் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்துள்ளார். அந்த வழியாக வந்த பிற வாகன ஓட்டிகள் வண்டியை நிறுத்திவிட்டு உயிருக்கு போராடியவருக்கு முதலுதவி செய்து, ஆம்புலன்ஸ்க்கு தகவல் கூறி வண்டியில் ஏற்றி அனுப்பி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவரும் ஜனவரி 24ந்தேதி காலை பலியாகியுள்ளார்.
மோதிய வாகனம் குறித்து யாருக்கம் அடையாளம் தெரியவில்லை. இருந்தும் இது தொடர்பாக வாணியம்பாடி தாலுக்கா போலீஸார் வழக்கு பதிவு செய்து மோதிவிட்டு சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதுப்பற்றி பொதுமக்கள் சார்பில் சிலர் நம்மிடம், விபத்து நடந்தயிடத்தில் சிசிடிவி கேமராக்கள் உள்ளன. இதில் விபத்து நடந்த காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த வீடியோ காட்சிகளை காவல்துறை வெளியிட மறுக்கிறது, சம்மந்தப்பட்டவர்களையும் மற்றவர்களுக்கு தரக்கூடாது என மிரட்டியுள்ளது.
காவல்துறையினர், அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து என வழக்கு பதிவு செய்ய பார்க்கிறது. அப்படி செய்கிறார்கள் என்றால், அந்த வாகனம் ஏதோ மிக முக்கிய பிரமுகருடையதாகத்தான் இருக்கும். அதை மறைக்கவே இப்படி காவல்துறை செய்கிறது. மூன்று உயிர்கள் பலியாகியுள்ளது, அந்த குடும்பத்தின் நிலை காவல்துறைக்கு பெரியதில்லையாம், யாரோ ஒரு முக்கிய பிரமுகர் தான் முக்கியமா என கேள்வி எழுப்புகின்றனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.