
திருச்சி பாலக்கரை பகுதியிலிருந்து சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி ஒரு இன்னோவா கார் வந்துகொண்டிருந்தது. சத்திரம் பேருந்து நிலையம் அருகே வரும்போது அந்தக் கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடி ‘இந்திராகாந்தி கல்லூரி’க்கு எதிரே இருக்கும் வணிக வளாகத்தின் நுழைவு வாயிலில் இடித்து நின்றது. இந்த விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏதுமின்றி, சிறு சிறு காயங்களுடன் கார் ஓட்டுநரும், வணிக வளாகங்களில் பணிபுரிந்தவர்களும் உயிர் தப்பினர்.
இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. விபத்து குறித்த தகவல் போக்குவரத்து காவலர்களுக்குத் தெரியவரவே உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, விபத்துக்குள்ளான காரை மீட்பு வாகனத்தின் உதவியுடன் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதன் பின்பு அங்கு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.